நெட்ஸ் சேவையில் செப்டம்பர் 23ஆம் தேதி இடையூறு ஏற்பட்டது. அதைச் சரிசெய்ய தேவையான மேம்படுத்தப்பட்ட மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டபின் அந்த இடையூறு படிப்படியாகச் சரிசெய்யப்பட்டு வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நெட்ஸ் நிறுவனத்தின் பேச்சாளர், கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, நெட்ஸ் சேவை பாதிக்கப்பட்ட சில முனையங்களில் மீண்டும் முழுமையான சேவையை வழங்குவதற்காக மேம்படுத்தப்பட்ட மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதையடுத்து பாதிக்கப்பட்ட முனையங்கள் படிப்படியாகச் சீரான நிலைக்குத் திரும்புவதாக அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.
அத்துடன் எங்களுடைய வாடிக்கையாளர் சேவைக் குழு பாதிக்கப்பட்ட வர்த்தகர்களின் முனையங்களுக்கு மேம்படுத்தப்பட்ட மென்பொருளைப் பதிவேற்றம் செய்வதில் உதவி வருகிறது. நெட்ஸ் சேவை முனையக் கட்டமைப்புகளில் 5 விழுக்காடு பகுதியே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பிரச்சினை செப்டம்பர் 23ஆம் தேதி காலை 10.12 மணிக்குக் கண்டறியப்பட்டது. அதையடுத்து அந்த நிறுவனம் தனது ஃபேஸ்புக் பதிவில், பற்று, கடன் அட்டை உள்ளிட்ட நெட்ஸ் தொடர்பான சேவைகள் தற்காலிகமாகச் செயல்படவில்லை என்று தெரிவித்திருந்தது.
பின்னர், பாதிக்கப்பட்ட நெட்ஸ் முனையங்களில் கியூஆர், கான்டேக்ட்லெஸ், தனிநபர் அடையாள எண் ஆகியவை தொடர்புடைய சேவைகள் தற்காலிகமாகச் செயல்பாட்டில் இல்லை என்று நெட்ஸ் நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்போது பாதிக்கப்பட்ட முனையங்களில் படிப்படியாக நிலைமை சீராகி வருவதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.