எவரெஸ்ட் மலைப்பகுதியில் சிங்கப்பூரை சேர்ந்த 76 வயது மலையேறியைக் காணவில்லை

எவரெஸ்ட் மலைப்பகுதியில் சிங்கப்பூரை சேர்ந்த 76 வயது மலையேறியைக் காணவில்லை

2 mins read
1043b920-3d23-45f4-b31a-927e4bdeb0da
இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் மூலம் காணாமற்போன சிங்கப்பூரரின் குடும்பத்தாருடனும் நேப்பாள அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியது. - படம்: இணையம்

நேப்பாளத்தில் உள்ள எவரெஸ்ட் மலைப்பகுதியில் சிங்கப்பூரைச் சேர்ந்த மலையேறியைக் காணவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது.

76 வயது திரு ஹேரி டானைத் தேடிக் கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவரெஸ்ட் மலையடிவார முகாமுக்குத் தெற்குப் பகுதியில் உள்ள கொங்மா லா மலைப்பாதைக்கு அருகில் அவர் மாயமானதாக இணையத்தில் வலம் வரும் பதிவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகம் மூலம் காணாமற்போன சிங்கப்பூரரின் குடும்பத்தாருடனும் நேப்பாள அதிகாரிகளுடனும் தொடர்பில் இருப்பதாக வெளியுறவு அமைச்சு கூறியது.

“தேடுதல், மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பான நிலவரங்களை வெளியுறவு அமைச்சு மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. காணாமற்போனவரின் குடும்பத்துக்குத் தேவையான ஆதரவு வழங்கப்படும்,” என்று வெளியுறவு அமைச்சின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

கொங்மா லா மலைப்பாதையைக் கடந்து செல்வது மிகவும் சவால்மிக்கது என்று மலையேறும் நடவடிக்கைகள் தொடர்பான இணையப்பக்கங்கள் தெரிவித்துள்ளன.

அங்கிருந்து எவரெஸ்ட் மலையைப் பார்க்க முடியும் என்றும் அதைக் கடந்து செல்ல ஏறத்தாழ இரண்டு முதல் மூன்று வாரங்கள் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 26ஆம் தேதியன்று திரு டான் மாயமானது குறித்து தமக்குத் தெரியவந்ததாக Responsible Adventures எனும் மலையேறும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யும் நிறுவனத்தின் நிறுவனரான 58 வயது திரு ராஜ் தமாங் கூறினார்.

திரு தமாங் சிங்கப்பூரில் வளர்ந்த நேப்பாளர்.

2015ஆம் ஆண்டில் நேப்பாளத்தில் நடைபெற்ற குழிப்பந்து (கோல்ஃப்) போட்டியில் திரு டானின் அறிமுகம் அவருக்குக் கிடைத்தது.

2029ஆம் ஆண்டில் திரு டானும் திரு தமாங்கும் எவரெஸ்ட் மலையடிவார முகாம்வரை ஒன்றாகச் சென்றனர்.

அங்கு திரு டான் குழிப்பந்து விளையாடியதை திரு தமாங் நினைவுகூர்ந்தார்.

“ஹேரி மிகவும் ஆரோக்கியமானவர். நல்ல உடற்திறன் கொண்டவர்,” என்று திரு தமாங் கூறினார்.

குறிப்புச் சொற்கள்
எவரெஸ்ட்மாயம்சிங்கப்பூரர்மீட்பு