சிங்கப்பூரில் 220 பேரை ஆட்குறைப்பு செய்கிறது சீட்ரியம்

சிங்கப்பூரில் 220 பேரை ஆட்குறைப்பு செய்கிறது சீட்ரியம்

கோப்புப் படம்: எஸ்பிஎச் மீடியா

24 Nov 2026 - 4:56 pm

2 mins read

கடல்துறை, கப்பல் கட்டுமானம், எரிசக்தித் துறை நிறுவனமான சீட்ரியம் (Seatrium), தனது உலகளாவிய செயல்பாடுகளைச் சீரமைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தனது சிங்கப்பூர் ஊழியரணியில் 220 பேரை, அதாவது கிட்டத்தட்ட இரண்டு விழுக்காட்டினரை ஆட்குறைப்பு செய்ய உள்ளதாக செவ்வாய்க்கிழமை (நவம்பர் 24) அறிவித்துள்ளது.

கடந்த 2023ல் செம்கார்ப் மரீன், கெப்பல் ஆஃப்ஷோர் அண்ட் மரீன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து சீட்ரியம் உருவான பிறகு மேற்கொள்ளப்படும் முதல் ஆட்குறைப்பு நடவடிக்கை இது. 2025 ஆகஸ்ட் நிலவரப்படி, அந்நிறுவனத்தில் உலகளவில் 24,000க்கும் மேற்பட்ட ஊழியர்களும் சிங்கப்பூரில் ஏறத்தாழ 12,000 ஊழியர்களும் பணியாற்றி வந்தனர்.

நிறுவனத்தின் ஊழியர் மறுவடிவமைப்புத் திட்டத்தின்கீழ், 2023ல் 15 ஆக இருந்த கப்பல் தளங்கள் தற்போது 11ஆகக் குறைக்கப்பட்டுள்ளன.

நிறுவனத்தின் முதன்மைத் தளமாகத் துவாஸ் பொலிவார்ட் தளம் தொடரும் நிலையில், அட்மிரல்டி தளம் படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 2028ல் சிங்கப்பூர் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

பெனோய், பைனியர், துவாஸ் தளங்கள் உலகளாவியத் திட்டங்களுக்கு ஏற்றவாறு மறுசீரமைக்கப்படும்.

பணியிட மாற்றம், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் குறித்து ஆராயப்பட்டபோதிலும், மாறிவரும் செயல்பாட்டு முறைக்குச் சில பதவிகள் பொருந்தாததால் இந்நடவடிக்கை தவிர்க்க முடியாததாகிவிட்டது என்று நிறுவனம் விளக்கமளித்துள்ளது.

சீட்ரியம் நிறுவனம் வெறுமனே ஆட்குறைப்பு செய்யவோ செலவுகளைக் குறைக்கவோ இல்லை என அதன் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஓங் தெரிவித்துள்ளார். மாறிவரும் துறையில் புதிய வாய்ப்புகளைப் பெறவும், தகுந்த திறன்கள், செயல்பாட்டு முறைகளுடன் போட்டியிடவும் நிறுவனத்தை மறுசீரமைப்பதாக அவர் கூறினார்.

இம்முடிவுகள் கடினமானவை என்றாலும், சீட்ரியமின் உறுதிப்பாடு நிறுவனத்தை மேலும் வலிமையுடன் மீண்டெழச் செய்யும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட சீட்ரியம் ஊழியர் சங்கத்திற்கு இது குறித்து முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டு, முத்தரப்பு வழிகாட்டுதல்களின்படி பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்குப் புதிய வேலைவாய்ப்பு, தொழில் வழிகாட்டுதல் உதவிகளை வழங்க மனிதவள அமைச்சு, தேசிய தொழிற்சங்க காங்­கி­ரஸ் (என்­டி­யுசி) வேலைவாய்ப்பு, வேலை தகுதிக் கழ­கம் (இ2ஐ) அமைப்புகளுடன் இணைந்து செயல்படுவதாக ‘பொறுப்பான ஆட்குறைப்பு, வேலைவாய்ப்பு உதவிப் பணிக்குழு’ தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை நண்பகல் 12.23 மணி நிலவரப்படி சீட்ரியம் பங்குவிலை 3.9% உயர்ந்து 1.59 வெள்ளிக்கு வணிகமானது.

குறிப்புச் சொற்கள்