இரண்டாம் தலைமுறை ‘பேநவ்’: அடுத்த கட்டத் திட்டவரைவு அறிவிப்பு

இரண்டாம் தலைமுறை ‘பேநவ்’: அடுத்த கட்டத் திட்டவரைவு அறிவிப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Nov 2026 - 9:32 pm

2 mins read

சிங்கப்பூர் நாணய ஆணையமும் சிங்கப்பூர் வங்கிகள் சங்கமும் ‘இரண்டாம் தலைமுறை பேநவ்’ (பேநவ் ஜென் 2) கட்டண முறையின் இரண்டாம் கட்டத்திற்கான செயல்பாட்டுத் திட்டவரைவை அறிவித்துள்ளன.

அந்தக் கட்டண முறையின் முதற்கட்டத்தில் கண்டறியப்பட்ட முக்கியக் குறைபாடுகளைக் களைவதில் இந்தத் திட்டவரைவு கவனம் செலுத்தும். முக்கியமாக, விரைவுத் தகவல் குறியீட்டு ஒருங்கிணைப்பு, அதிக மதிப்புள்ள கட்டணங்கள், சச்சரவுகளுக்குத் தீர்வுகாண்பதற்கான விதிமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

பேநவ் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

2023ஆம் ஆண்டிலிருந்து ‘யுஓபி’ வங்கியில் ‘பேநவ்’ பரிவர்த்தனைகள் இருமடங்காகியுள்ளதாக வங்கியின் பிரிவுத் தலைவர் சூ வான் சிம் கூறினார்.

மின்வணிகப் பயனீட்டாளர்கள், சிறு வணிகர்கள், சுற்றுப்பயணிகள், சிங்கப்பூரர்கள் முதலியோருடன் கலந்தாலோசித்து இந்த மேம்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வங்கிகளும் கட்டணச் சேவை நிறுவனங்களும் இதில் இணைந்துள்ளன.

சிங்கப்பூரின் ஒருங்கிணைந்த கட்டணக் குறியீடான ‘எஸ்ஜிகியூஆர்+’ உடன் ‘பேநவ் ஜென் 2’ இணைக்கப்படும். இதன் மூலம் பயனீட்டாளர்கள் தங்களுக்கு விருப்பமான செயலியைப் பயன்படுத்திக் கட்டணம் செலுத்தலாம்.

வட்டாரக் கட்டணக் கட்டமைப்புகளும் இதனுடன் இணையும். இதற்கான பணிகள் இவ்வாண்டு தொடங்கியுள்ள நிலையில், 2027ல் வரையறுக்கப்பட்ட அளவிலும் 2028ல் விரிவாகவும் இது நடைமுறைப்படுத்தப்படும்.

கட்டணச் செயலிக்கு நேரடியாக அழைத்துச் செல்லும் இணைப்பு வசதிக்கு 2027 இறுதிக்குள் பொதுவான தொழில்நுட்பத் தரநிலைகள் உருவாக்கப்பட்டு, 2028ல் படிப்படியாக இணைக்கப்படும். 2027 பிற்பகுதியிலிருந்து அதிக மதிப்புள்ள அரசாங்கக் கட்டணங்களையும் இதன்வழி செலுத்தலாம்.

வணிகர்களுடனான பரிவர்த்தனைகளில் ஏற்படும் சச்சரவுகள், பணத்தைத் திருப்பி அளித்தல், மோசடிகள் ஆகியவற்றுக்குத் தீர்வுகாணத் தெளிவான விதிமுறைகள் 2028ல் அறிமுகப்படுத்தப்படும்.

செயற்கை நுண்ணறிவு முகவர்கள் வழி கட்டணம் செலுத்துதல், சிறிய, அதிக அளவிலான பரிவர்த்தனைகள், அடையாளவில்லை வழி கட்டணங்கள் குறித்தும் ஆய்வு செய்யப்படும்.

மின்னிலக்க, தானியக்கப் பொருளியலுக்கு உதவும் வகையில் 2027ல் எதிர்காலக் கட்டணக் கட்டமைப்பு வரைவுத்திட்டமும் உருவாக்கப்படும்.

குறிப்புச் சொற்கள்