முகக் கவசம் அணிய மறுத்த மாதிற்கு இரண்டாவது முறை சிறைத் தண்டனை

முகக் கவசம் அணிய மறுத்த மாதிற்கு இரண்டாவது முறை சிறைத் தண்டனை

1 mins read
a7315c6b-916a-49d5-a3d5-75ef26639cda
பூன் சியூ யோக்கிற்கு 2021ஆம் ஆண்டில் 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பூன் சியூ யோக் என்ற மாதிற்கு திங்கட்கிழமை ஒன்பது வாரங்கள் சிறைத்தண்டனையும் $3,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டில் கொவிட்-19 கிருமிப்பரவல் காலத்தின்போது ஆர்ச்சர்ட் ரோட்டில் முகக் கவசத்தைப் பலமுறை அணிய மறுத்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக அவருக்கு அந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் இரண்டாம் முறையாகச் சிறையில் அடைக்கப்படுகிறார். அதே போன்ற குற்றங்களுக்காக 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவருக்கு 16 வாரங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

ஆக அண்மைக் குற்றங்கள் அவர் சிறையிலிருந்து விடுதலையான பிறகு செய்யப்பட்டவை.

தீர்ப்பை வழங்குவதற்கு முன்னர் பூன் கீழ்ப்படியாத குற்றவாளி என்று மாவட்ட நீதிபதி டான் ஜென் செ குறிப்பிட்டார்.

செய்த குற்றங்களுக்கு பூன் வருத்தம் தெரிவிக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

பூன்னுக்கு எட்டிலிருந்து 14 வாரங்கள் சிறைத்தண்டனையும் $2,000 முதல் $3,000 வரை அபராதமும் விதிக்கப்படவேண்டும் என்று முன்னதாக அரசாங்கத் தரப்புத் துணை வழக்கறிஞர் ஹீர்ஷான் கோர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

56 வயதான பூன், சிங்கப்பூர் கடற்படையில் 12 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தார்.

தமக்கு அபராதம் மட்டுமே விதிக்குமாறு அவர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.

கொவிட்-19 (தற்காலிக நடவடிக்கைகள்) சட்டத்தின்கீழ் மூன்று குற்றச்சாட்டுகளும் தொற்றுநோய்த் தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டும் அவர் மீது சுமத்தப்பட்டது. வழக்கு விசாரணைக்குப் பிறகு குற்றவாளி என்று இவ்வாண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி நீதிபதி தீர்ப்பளித்தார்.

பூன்னிற்கு வழக்கறிஞர் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்