‘தி ஆன்லைன் சிட்டிசன்’ இணையப் பக்கம், அதன் உரிமையாளரின் ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், எக்ஸ் தளங்கள் ஆகியவற்றின் வழியாகப் பெறக்கூடிய நிதிப் பயன்கள் அவற்றுக்கு 2027ஆம் ஆண்டுவரை கிடைக்காதவாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்னிலக்க மேம்பாடு, தகவல் அமைச்சு புதன்கிழமை (ஜூன் 11) வெளியிட்ட அறிக்கையில், த ஆன்லைன் சிட்டிசன் இணைய பக்கம், அதன் சமூக ஊடகத் தளங்கள் ஆகியவற்றுக்கு எதிராக 2023ஆம் ஆண்டு ஜூலை மாதம் பிரகடனப்படுத்தப்பட்ட இணைய தளங்கள் என்ற அடையாளம் ஜூலை 21ஆம் தேதி காலாவதியாக உள்ளன.
அந்த நிலையில் அவை இணையத்தில் பொய்யுரை, சூழ்ச்சித் திறத்துக்கு எதிரான சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் நடவடிக்கை இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அதன்படி, அவர்கள் அந்தக் காலகட்டத்தில் அவற்றின் உரிமையாளர் எவ்வித நிதி ஆதாயமும் பெறக்கூடாது.
ஆனால், ‘தி ஆன்லைன் சிட்டிசன்’ இணையப் பக்கம் தொடர்ந்து தனது தளங்களில் பொய்யுரையை கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பரப்பி வந்துள்ளதாக அமைச்சு கூறுகிறது.
அதற்காக அவற்றின் மீது ஜூன் 2025 வரையிலான காலகட்டத்தில் அந்த இணைய பக்கத்துக்கு எட்டு திருத்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன என்று அமைச்சு சுட்டியது.