அடுத்த ஆண்டு உயர்நிலை ஒன்றுக்கான மாணவர் சேர்க்கை முடிவுகள் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு எழுதிய மாணவர்கள், உயர்நிலைப் பள்ளிச் சேர்க்கைக்கான விண்ணப்பத்துடன் சிங்கப்பூர் தொலைபேசி எண்ணை இணைத்திருந்தால், குறுஞ்செய்தி வாயிலாக அவர்களுக்கு முடிவுகள் தெரிவிக்கப்படும்.
மாணவர்கள் தங்கள் பிறப்புச் சான்றிதழின் எண் அல்லது அடையாள அட்டை எண் மற்றும் உயர்நிலை ஒன்றாம் நிலைக்கான தனிநபர் அடையாள எண் அல்லது தொடக்கப்பள்ளிக்கான தனிநபர் அடையாள எண் ஆகியவற்றை ‘எஸ் 1-இண்டர்நெட் சிஸ்டம்’ எனும் இணையத்தளத்தில் உள்ளீடு செய்தும் முடிவுகளைத் தெரிந்துகொள்ளலாம்.
முடிவுகளைப் பெற்றுக்கொண்ட மாணவர்கள், புதிய பள்ளிக்கு நேரில் செல்லவேண்டிய அவசியமில்லை என்று அமைச்சு கூறியது.
புத்தகங்களையும் சீருடைகளையும் எங்கு வாங்குவது, பள்ளிக்கு எப்போது வர வேண்டும் போன்ற விவரங்களை அறிய மாணவர்கள் பள்ளியின் இணையத்தளங்களை அணுகலாம்.