வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலையின் ஒரு பகுதி அடுத்த மாதம் (செப்டம்பர் 2025) 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை போக்குவரத்துக்கு மூடப்படவிருக்கிறது.
வெஸ்ட் கோஸ்ட் லிங்கிற்கும் பாண்டான் கிரெசென்ட்டிற்கும் இடைப்பட்ட பகுதி மூடப்படும் என்று வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் புதன்கிழமை (ஆகஸ்ட் 27) வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. புதிய மேம்பாலம் கட்டுப்படுவதால் இரு திசைகளிலும் அந்தப் பகுதி போக்குவரத்துக்குத் தற்காலிகமாக மூடப்படும். வெஸ்ட் கோஸ்ட் கிரெசென்ட் புளோக் 801க்கு அருகே வெஸ்ட் கோஸ்ட் நெடுஞ்சாலைக்குக் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டப்படும். கட்டுமானப் பணிகள் செப்டம்பர் 2ஆம் தேதி தொடங்கி 4ஆம் தேதி வரை ஒவ்வொரு நாளும் இரவு 11 மணியிலிருந்து அடுத்த நாள் அதிகாலை 5 மணி வரை நடைபெறும்.
சாலைப் பகுதி மூடப்பட்ட நேரங்களில், வெஸ்ட் கோஸ்ட் லிங்க், வெஸ்ட் கோஸ்ட் ரோடு ஆகிய மாற்றுவழிகளைப் பயன்படுத்துமாறு வாகனமோட்டிகளுக்கு ஆலோசனை கூறப்படுகிறது.
இறுதிப் பேருந்துச் சேவை முடிவுறும்வரை ஒரு தடம் மட்டும் பொதுப் பேருந்துகளுக்காகத் திறந்திருக்கும். அந்தக் காலக்கட்டத்தில் பாண்டான் கிரெசென்ட்டுக்கான வழி மட்டும் தொடர்ந்து திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய மேம்பாலத்தின் கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு (2026) மார்ச் மாதம் நிறைவுறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு வசிக்கும் குடியிருப்பாளர்கள் வெஸ்ட் கோஸ்ட் பூங்காவுக்கும் நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிறுத்தமொன்றுக்கும் செல்ல கூரையுடன் கூடிய மேம்பாலம் உதவியாக இருக்கும். சாய்வுதளங்கள், மின்தூக்கிகள் போன்ற வசதிகளும் அமைக்கப்படும்.