சிங்டெல் கட்டடத்தில் ரோபோக்களுக்குப் பாதுகாப்பான கட்டமைப்பு

சிங்டெல் கட்டடத்தில் ரோபோக்களுக்குப் பாதுகாப்பான கட்டமைப்பு

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

26 Nov 2026 - 8:12 pm

2 mins read

சிங்கப்பூரின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான சிங்டெல், அரசாங்கத் தொழில்நுட்ப அமைப்புடன் (கவ்டெக்) இணைந்து அறிவார்ந்த நகர இயக்கக் கட்டமைப்பைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

கட்டமைப்பு சிங்டெல் நிறுவனத்தின் புதிய அலுவலகக் கட்டடத்தில் செயல்படும்.

இதன்மூலம், தானியங்கி ரோபோக்கள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள், அறிவார்ந்த கட்டட உள்கட்டமைப்பு இடையே பாதுகாப்பான தொடர்பு ஏற்படும்.

ஜேடிசியும் கவ்டெக்கும் உருவாக்கிய ‘திறந்த மின்னிலக்கத் தளம்’ கட்டமைப்பு, சோமர்செட்டில் புதுப்பிக்கப்படும் சிங்டெல்லின் ‘ஒன் காம்சென்டர்’ தலைமையகத்தில் பயன்படுத்தப்படவுள்ளது.

அக்கட்டடம் 2028ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசாங்கத் துறைக்குப் பிறகு தனியார்த் துறையில் இத்தளம் பயன்படுத்தப்படுவது இதுவே முதன்முறை. முன்னதாக, பொங்கோல் மின்னிலக்க வட்டாரத்தில் அது நிறுவப்பட்டது.

தொழில்நுட்ப நிறுவனங்கள் எந்திரவியல், செயற்கை நுண்ணறிவுச் செயலிகளைச் சோதிக்கும் சிறிய சிலிக்கான் பள்ளத்தாக்காக பொங்கோல் வட்டாரம் உருவாகிறது.

புதிய கட்டமைப்பின் மூலம் ரோபோக்களுக்கும் கட்டடக் கட்டமைப்புகளுக்கும் பொதுவான இடைமுகங்கள் வழியாகத் தரவுகளைப் பரிமாறி இணைந்து செயல்பட முடியும்.

இந்த முயற்சி சிங்கப்பூரின் பிற கட்டடங்களிலும் அறிவார்ந்த வட்டாரங்களிலும் புதிய கட்டமைப்பைப் பரவலாகப் பயன்படுத்த வழிவகுக்கும்.

“செயற்கை நுண்ணறிவு உலகின் தினசரி நடவடிக்கையில் இணைந்துவிட்டால் , பொருள் விநியோகம் முதல் பராமரிப்பு வரை கட்டடங்களில் அதிக தானியங்கி ரோபோக்கள் செயல்படும்,” என்று சிங்டெல் சிங்கப்பூர் தலைமை நிர்வாக அதிகாரி இங் தியான் சோங் கூறினார்.

மனிதர்களுடன் செயல்படும் தானியங்கி அமைப்புகளை ரோபோக்கள் அடையாளம் கண்டு பாதுகாப்பாகத் தொடர்புகொள்ள வேண்டும் என்றார் அவர்.

சிங்டெல்லின் இணைய, செயற்கை நுண்ணறிவுத் திறனும் கவ்டெக்கின் அறிவார்ந்த கட்டடத் தளத் திறனும் இணைவது, கட்டட நிர்வாகத்தில் புதிய வழிகளை உருவாக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்