சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகச் சங்கத்தின் பட்டதாரி மன்ற இணையத்தளம் தற்காலிகமாக ஜனவரி 11ஆம் தேதி மதியம் முதல் முடக்கப்பட்டு, ஜனவரி 12ஆம் தேதி காலை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது.
பாதுகாப்பில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தச் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அன்றைய தினம் அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், உறுப்பினர்களின் தரவுகளில் பாதிப்பு ஏற்பட்டதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை எனச் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகச் சங்கம் கூறியது.
மேலும், அந்தச் சங்கத்தில் மேற்கொள்ளப்பட்ட புதுப்பிப்பு நடவடிக்கை, நிகழ்ச்சிகள், வசதிகள், வெளியீடுகள் போன்ற விவரங்களை அந்த இணையத்தளம் வழங்கி வருகிறது.
சங்கத்தின் இணையத்தளத்தில் தரவுத் திருட்டு எதுவும் நிகழ்ந்ததா என்பதைக் கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அச்சங்கத்தின் பேச்சாளர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தித்தாள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்தபோது தெரிவித்தார்.
சோதனைகளின் முடிவில் எந்தவொரு அங்கீகரிக்கப்படாத ஊடுருவலும் கண்டறியப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
மேலும், ஜனவரி 11ஆம் தேதியன்று பிற்பகல்வாக்கில் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகச் சங்க இணையத்தளத்தைப் பாதிக்கும் குறைபாடுகள் குறித்து அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறினார்.
குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைக் களைய போதுமான நேரம் தேவைப்பட்டதால் சங்கத்தின் இணையத்தளச் சேவையை முடக்கியதாகவும் ஜனவரி 12ஆம் தேதியன்று காலை அது மீண்டும் செயல்படத் தொடங்கியதாகவும் அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
இணையத் தேடுபொறியை மேம்படுத்தும் நோக்கங்களுக்காக மற்ற பக்கங்களுடன் சங்கத்தின் இணையப்பக்கங்களை இணைப்பதுபோல் தோன்றிய மறைக்கப்பட்ட தகவல்களை உள்ளடக்கிய சில முறையற்ற நடவடிக்கைகள் குறித்து புகார் அளிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

