மெக்ரிட்சி நீர்த்தேக்கப் பூங்காவில் இருந்த ஆறு தெம்புசு மரங்கள் தேசிய பூங்காக் கழகத்தால் அகற்றப்பட்டுவிட்டன.
வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 11) ஊடகங்களுக்கு அளித்த பதிலில் கழகம் அதனைத் தெரிவித்தது.
பேடல் லாட்ஜ் அருகே மரங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் அடிபாகம் மட்டும் காணப்பட்டதைப் படம்பிடித்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய ஒருவர், என்ன நடந்தது என்று வியப்புடன் கேள்வி எழுப்பி இருந்தார்.
அதன் தொடர்பாகப் பதிலளித்த தேசிய பூங்காக் கழகத்தின் அதிகாரியான ஜில்லியன் லிம், பொதுப் பாதுகாப்புக் காரணங்களுக்காக செப்டம்பர் 2ஆம் தேதி மரங்கள் அகற்றப்பட்டதாகக் கூறினார்.
மரங்களை வழக்கமாக ஆய்வு செய்து வந்தபோது இந்த மரங்கள் சுகாதாரமற்றவையாகவும் சிதைவு மற்றம் கட்டமைப்பு குறைபாடுகளுடனும் இருப்பது கண்டறியப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
அகற்றப்பட்ட மரங்களுக்குப் பதிலாக, அந்த இடத்தில் பல்வேறு வகையான உள்ளூர் மரங்கள் நடப்படும் என்று திருவாட்டி லிம் மேலும் கூறினார்.

