ஒரு சிறு விதை அழகிய செடியாக, மரமாகச் செழித்து வளர்வதுபோலவே சமூகத் தோட்டங்களின்வழி அண்டை வீட்டாராக, நண்பர்களாக, சிங்கப்பூரர்களாக ஒன்றிணைந்து பொது இடங்களைச் செழிக்கச் செய்வதுடன் சமூகப் பிணைப்பையும் தழைக்கச் செய்ய முடியும் என்று துணைப் பிரதமர் கான் கிம் யோங் கூறியுள்ளார்.
தேசியப் பூங்காக் கழகத்தின் சமூகத் தோட்டக்கலைத் திட்டத்தின் 20 ஆண்டு நிறைவைக் கொண்டாடும் ‘ஹோர்ட் ஃபெஸ்ட்’ திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியில் அவர் இதனைச் சொன்னார்.
இத்திட்டத்தின் மூலம் ஆதரவு, மீள்திறன் மட்டுமன்றி சமூக முன்னெடுப்பில் அனைவரையும் உள்ளடக்கிய, வாழக்கூடிய, ‘இயற்கையில் ஒரு நகரம்’ உருவெடுப்பதைக் காணமுடிவதாகவும் அவர் சொன்னார்.
ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளுடன் களைகட்டவுள்ள இவ்விழா சனிக்கிழமை (ஆகஸ்ட் 23) தொடங்கியது.
ஹோர்ட் பார்க்கில் நடைபெற்ற இவ்விழாவில் துணைப் பிரதமர் கான் கிம் யோங்குடன் பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா, தேசியப் பூங்காக் கழகத் தலைமை நிர்வாக அதிகாரி ஹுவாங் யு நிங் ஆகியோர் பங்கேற்றனர்.
விழாவைத் தொடக்கிவைத்ததுடன், ‘சமூகத் தோட்டக்கலைத் திட்டம் - நமது சமூகத் தோட்டங்களின் கதைகள்’ எனும் சமூகத் தோட்டம் ஏற்படுத்திய ஆக்ககரமான தாக்கம் குறித்த 20 கதைகளைக் கொண்ட நூலையும் திரு கான் வெளியிட்டார்.
2005ஆம் ஆண்டு தாம் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மேஃபேரில் ஒரே ஒரு தோட்டத்தில் தொடங்கிய இத்திட்டம், தற்போது ஏறத்தாழ 48,000 தோட்டக்கலை ஆர்வலர்களுடன் விரிவடைந்துள்ளதை திரு கான் சுட்டினார்.
கொவிட்-19 பெருந்தொற்றின்போது தேசியப் பூங்காக் கழகம் ‘உணவுத் தாவரம் வளர்க்கும்’ திட்டத்தின்கீழ் 800,000 வீடுகளுக்கு விதைகள் வழங்கியதைச் சுட்டிய அவர், 20ஆம் ஆண்டு நிறைவை முன்னிட்டு 2025 மார்ச் மாதம் தொடங்கப்பட்ட ‘வளர்ப்போம், பகிர்வோம்’ திட்டத்தில் 20,000 பேர் பங்கேற்றுள்ளதையும் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
சமூகத் தோட்டங்களின் முன்னோடிகளாகத் திகழும் சிலரைக் குறிப்பிட்டு திரு கான் பாராட்டினார்.
தோட்டக்கலைமீது ஆர்வத்தை வளர்த்து, பசுமையான இடங்களை அதிகரிப்பதுடன், அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதையும் சமூகப் பொறுப்புணர்வை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்ட சமூகத் தோட்டக்கலைத் திட்டம் 2005ல் தொடங்கப்பட்டது.
அதன் 20ஆம் ஆண்டு விழாவில், இத்திட்டத்தின் பயணம் குறித்த காணொளியும் ஒளிபரப்பப்பட்டது. இவ்வாண்டின் சமூகத் தோட்டக்கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றோருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
சிறந்த தக்காளிச் செடி, பூசணிச் செடி வளர்ப்புக்கும் பூமிக்கடியில் விளையும் உணவுப் பொருள்களை விளைவித்ததற்குமாக மூன்று கிண்ணங்களை திரு லோ வீ டாட், 67, வென்றார்.
கடந்த ஏழாண்டுகளாகத் தோட்டக்கலையில் ஈடுபட்டு வரும் புக்கிட் பாஞ்சாங் குடியிருப்பாளரான லோ, “குடும்பம், பொறுப்பிலிருந்து ஓய்வுபெற்றபின் நேரம் கிடைத்தபோது தோட்டக்கலையில் ஈடுபடத் தொடங்கினேன். நானே விளைவித்த காய்கறிகளை உண்ணும்போது வரும் சுவையும் மகிழ்ச்சியும் அலாதியானது. அது தரும் ஊக்கம் தொடர்ந்து மேலும் செயல்பட வைக்கிறது,” என்று பெருமை ததும்பக் கூறினார்.
கடந்த 10 ஆண்டுகளாகச் சமூகத் தோட்டக்கலைத் திட்டத்தின் தூதுவராக இருக்கும் லலிதா நாயர், “தொடர்ந்து பலருக்குத் தோட்டக்கலையில் ஆர்வம் அதிகரித்து வருவதைப் பார்ப்பதில் மகிழ்ச்சி.
“இத்திட்டத்தில் பங்களிப்பதால், எனக்குத் தெரிந்தவற்றைப் பிறருக்கும் கற்பிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இது என்னை மகிழ்ச்சியாகவும் துடிப்புடனும் வைத்துள்ளது,” என்றார்.