ஜோகூர் பாருவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவு ரயில் சேவை (ஆர்டிஎஸ்) இணைப்பின் மூலம் கிடைக்கும் வாய்ப்புகள், பலன்களை சிங்கப்பூரர்களும் உள்ளூர் வர்த்தகங்களும் பயன்படுத்திக்கொள்ளப் புதிய பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மார்ச் 16ஆம் தேதி உட்லண்ட்ஸ் நார்த் பிளாசாவுக்கு வருகை தந்த சுகாதார அமைச்சர் ஓங் யி காங் அறிவித்தார். அத்தியாவசிய பொருள்களை ஒரு வெள்ளிக்கு வாங்கும் பற்றுச்சீட்டுத் திட்டத்தைத் தொடங்கிவைக்க அவர் வந்திருந்தார்.
பணிக்குழுவை அமைப்பதற்கு உதவ, தாம் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங்கை அணுகியதாக திரு ஓங் குறிப்பிட்டார். ஆர்டிஎஸ் மூலம் அமையும் வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்வதை ஆராயவும் பாதிக்கப்பட்டோருக்குத் தாக்கத்தைத் தணிக்க வழிகளைக் கண்டறியவும் அக்குழு முனையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செம்பவாங் குழுத்தொகுதியில் ரயில் இணைப்பு முனையமான உட்லண்ட்ஸ் நார்த் நிலையம் அமைந்திருப்பதால் தாம் மேம்பாட்டுப் பணிகளை ‘ஆர்வத்துடன் கவனிப்பதாக’ திரு ஓங் குறிப்பிட்டார்.
ஜோகூருக்குச் சென்று பொருள் வாங்க சிங்கப்பூரர்களுக்கு ஆர்டிஎஸ் இணைப்பு ஓர் உந்துதலாக இருக்கும் அதேவேளை, சிங்கப்பூரும் அதன் பல்வேறு சில்லறை வர்த்தகப் பகுதிகளுக்கும் குடியிருப்பு வட்டாரங்களுக்கும் புத்துணர்ச்சி ஊட்ட வாய்ப்பு அமையும்.
“இதனால், மலேசியாவிலிருந்து சிங்கப்பூருக்குப் பொருள் வாங்க வருவோருக்கும் வித்தியாசமான அனுபவம் காத்திருக்கும்,” என்று செம்பவாங் குழுத்தொகுதி எம்.பி.யாகவும் உள்ள திரு ஓங் தெரிவித்தார்.
இருப்பினும், ஜோகூர் பாரு வர்த்தகங்களுக்கு நேரடிப் போட்டித்தன்மை தரக்கூடிய பொருள்களையோ உணவையோ விற்கும் கடைகளை நடத்தும் சிங்கப்பூரர்களுக்கு பாதிப்பு இருக்கும் என்றும் எச்சரித்தார் அவர்.
குடியிருப்பு வட்டாரங்களில் உள்ள நிறுவனங்களுடனும் உள்ளூர் வர்த்தகங்களுடனும் பணிக்குழு ஆலோசனை மேற்கொண்டு அதன் கண்டுபிடிப்புகளையும் பரிந்துரைகளையும் 2026ஆம் ஆண்டு வெளியிடும் என்று வர்த்தக, தொழில் அமைச்சு தெரிவித்தது.