தடுப்பூசிகளுக்கு எதிர்ப்பு காட்டும் அமைப்பான ‘ஹீலிங் தி டிவைட்’டின் நிறுவனரான ஐரிஸ் கோவும் அவரது கணவரான ரேமண்ட் இங்கும் முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் திரு கெல்வின் செங்கிற்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்திருந்தனர்.
ஆனால் அந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்து அதற்கான செலவை அந்தத் தம்பதியர் ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கிற்கான செலவை அவர்கள் இருவரும் ஏற்கத் தவறியதால் அத்தம்பதியரின் உடைமைகளைப் பறிமுதல் செய்து அவற்றை விற்று செலவுக்கான தொகையைச் செலுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, திங்கட்கிழமை (பிப்ரவரி 10) காலை 10.20 மணி அளவில் ஃபேரர் பார்க் சாலையில் கோ- இங் தம்பதியரின் வீட்டிற்குத் திரு செங்கின் வழக்கறிஞரும் நீதிமன்ற அதிகாரி ஒருவரும் சென்றிருந்தனர்.
நீதிமன்றத்தின் அமலாக்க உத்தரவை நிறைவேற்ற அவர்கள் இருவரும் முயன்றனர்.
ஆனால் அந்தத் தம்பதியர் அவர்களைத் தங்கள் வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
பலவந்தமாக வீட்டிற்குள் நுழையும் உத்தி முதல் முயற்சியின்போது பொதுவாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
ஆனால் அடுத்தடுத்த முயற்சிகளில் தேவைப்பட்டால் அந்த உத்தி கடைப்பிடிக்கப்படலாம்.
தொடர்புடைய செய்திகள்
கொவிட்-19 தடுப்பூசி பற்றி தவறான செய்திகளைப் பரப்பியவர்களைக் கடுமையாக விமர்சித்து 2024ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் திரு செங் ஃபேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
திரு செங் பதிவு செய்திருந்த கருத்துகளைச் சாடி அவருக்கு எதிராக 48 வயது கோவும் 51 வயது இங்கும் சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சியின் முன்னாள் உறுப்பினர் திரு பிராட் போயரும் திரு பேவன் டேயும் திரு சான் சுவீ கியோங்கும் அவதூறு வழக்கு தொடுத்திருந்தனர்.
ஆனால் அதே ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
திரு இங், திரு டே, திரு சான் ஆகிய மூவரும் திரு செங்கிற்கு பொருள், சேவை வரியையும் சேர்த்து $2,500 செலுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
திரு செங்கின் கருத்துகளை அவதூறு பரப்பும் கருத்துகளாக எடுத்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்த நீதிபதி, வழக்கு தொடுத்த ஐவரும் அவருக்கு பொருள், சேவை வரியுடன் சேர்த்து $8,000 செலுத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
திரு போயர், திரு டே, திரு சான் ஆகிய மூவரும் பணத்தைச் செலுத்திவிட்டனர்.
பணத்தைச் செலுத்த தவறிய கோ- இங் தம்பதியரின் உடைமைகளைப் பறிமுதல் செய்யக் கோரி ஜனவரி 21ஆம் தேதியன்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கிடையே, பிப்ரவரி 7ஆம் தேதியன்று இங் மீது 12 மோசடிக் குற்றச்சாட்டுகள் பதிவாகின.
இங் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
அவர் தொடர்பான வழக்கு மார்ச் 7ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.
கோ மீது 14 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சதித் திட்டம் தீட்டுதல், தொல்லை விளைவித்தல் போன்றவை அவற்றில் அடங்கும்.
அவர் வழக்கு விசாரணை கோரியுள்ளார்.
கோ தொடர்பான வழக்கு மார்ச் 4ஆம் தேதி விசாரிக்கப்படும்.