முன்னாள் கைதிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர், சிறையிலிருந்து விடுதலையானவுடன் படிப்படியாகச் சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்கப்படுவதை எளிதாக்கும் நோக்கத்துடன் செலாராங் இடைநிலை இல்லம் செயல்படுகிறது.
திங்கட்கிழமை (பிப்ரவரி 9), செய்தியாளர்கள் இந்த இல்லத்தைச் சுற்றிப் பார்த்தனர்.
இடைநிலை இல்லத்தில் மெத்தைகள், குளியலறைகள், சாப்பிடுவதற்கும், வேலை செய்வதற்குமான பொதுக் கூடம், வைஃபை இணையச் சேவை போன்றவை வழங்கப்படுகின்றன.
தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் கைதிகள் இந்த இடைநிலை இல்லத்தில் ஈராண்டுகள் வரை தங்கலாம்.
இங்குத் தங்கியுள்ள முன்னாள் கைதிகள் வேலை தேடி வெளியே செல்லத் தொடங்குவதுண்டு. இதனால் இந்த இல்லம் சமூக மறு ஒருங்கிணைப்புக்கான இடமாகவும் செயல்படுகிறது என்று சிறைத்துறை தெரிவித்தது.
செலாராங்கில் தங்கியிருப்போர் ‘பிக்கல்பால்’ விளையாட்டில் ஈடுபடுவதைச் செய்தியாளர்கள் கண்டனர்.
வளாகத்தில் ஒரே மாதிரியான நான்கு கட்டடங்கள் உள்ளன என்றும் ஒவ்வொன்றிலும் ஒரு விளையாட்டுத் திடல் இணைக்கப்பட்டுள்ளது என்றும் சிறைத்துறை கூறியது.
விளையாட்டு முழுக்க முழுக்கத் தன்னார்வமாக விளையாடப்படும் வேளையில் முன்னாள் கைதிகள் அவற்றில் ஈடுபட மிகவும் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று சிறைத்துறை தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
மறு ஒருங்கிணைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக இல்லத்தில் தங்கியுள்ளோர்க்கு மாதம் ஒரு முறை குழுக் கலந்துரையாடல்கள் நடத்தப்படுகின்றன.
நிதி மேலாண்மை, தகவல் தொடர்புத் திறன், உணர்வுக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய இந்தக் கலந்துரையாடல்களைச் சில நேரங்களில் தொண்டூழியர்கள் வழிநடத்துவர்.
அவர்களில் ஒருவர் கணேசன், 55. வன்முறை மற்றும் போதைப்பொருள் குற்றங்களுக்காக மொத்தம் 37 ஆண்டுகள் சிறையில் இருந்த இவர், 2023ஆம் ஆண்டில் விடுவிக்கப்பட்டார்.
இப்போது அவர் பி1 கழகத்தில் இருக்கும் கைதிகளுக்கு ஊக்கமளிக்கும் உரைகள் நிகழ்த்துவதன் மூலம் தொண்டு செய்துவருவதாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இளம் கைதிகளுக்கு எப்போதும் என்னை ஓர் எடுத்துக்காட்டாகச் சுட்டிக்காட்டுவேன். அவர்கள் என் வயதை அடையும்போது வருத்தப்படுவார்களா என்பது நான் அடிக்கடி அவர்களிடம் கேட்கும் ஒரு வினா,” என்றார் அவர்.
செய்த குற்றத்தைப் பற்றி வெட்கப்பட ஒன்றுமில்லை என்று அடிக்கடி முன்னாள் கைதிகளுக்கு அவர் அறிவுறுத்துவதுண்டு.
“மறுவாழ்வுக்குப் பாடுபடும் எல்லா முன்னாள் கைதிகளுக்கும் உதவிக்கரம் நீட்ட விரும்புகிறேன்,” என்று திரு கணேசன் தெரிவித்தார்.

