சாலைத் தடுப்புமீது மோதிய தானியக்க வாகனம்

1 mins read
953f5c87-362f-415f-8548-1f32bed14470
கம்ஃபர்ட்டெல்குரோவின் தானாக இயங்கும் வாகனம் சாலைத் தடுப்புமீது மோதியது. - படம்: ஆல்வின் டியோ/ ஃபேஸ்புக்

கம்ஃபர்ட்டெல்குரோவின் (சிடிஜி) தானாக இயங்கும் வாகனம் ஒன்று சோதனையின்போது சாலைத் தடுப்புமீது மோதியது. சனிக்கிழமை (ஜனவரி 17) நிகழ்ந்த இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் அடையவில்லை. இதுபற்றி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கேள்வி எழுப்பியதற்கு பாதைகளைப் பழக்கப்படுத்தும் வழக்கமான சோதனை நடவடிக்கையின்போது தமது தானியக்க கார்களில் ஒன்று ஜனவரி 17 பிற்பகல் 3.20 மணியளவில் எட்ஜெடேல் பிளைன்சில் விபத்தில் சிக்கியதாக சிடிஜி தெரிவித்தது. தானியக்க வாகனம் சாலையில் ஒரு சிறிய பொருளைக் கண்டறிந்து அதற்கு ஏற்ப செயல்பட்டது. அப்போது அதில் இருந்த பாதுகாப்பு நடத்துநர் வாகனத்தின் ஸ்டீரியங்கை தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டார். “துரதிர்ஷ்டவசமாக வாகனம் சாலைத் தடுப்புமீது மோதியது. வாகனத்தில் பயணிகள் யாரும் இல்லை,” என்று சிடிஜி குறிப்பிட்டது. சிடிஜி மூலம் சம்பவம் குறித்து தெரிய வந்துள்ளதாக நிலப் போக்குவரத்து ஆணையம் கூறியுள்ளது. தானியக்க வாகனத்தைச் சோதிக்கும் பணி 2025 டிசம்பர் 15ல் தொடங்கியதாகக் கூறிய ஆணையம், சம்பவத்தை மதிப்பாய்வு செய்ய சிடிஜியுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தது. சிடிஜி, மூன்று தானியக்க வாகனங்களுக்கான ஒரு பாதையை பொங்கோலில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது. சீன தானியக்க நிறுவனமான Pony.ai அதற்கு கைகொடுத்து வருகிறது. இதர இரண்டு பாதைகளை, சீன தானியக்க வாகன நிறுவனமான WeRide உடன் சேர்ந்து கிராப் செயல்படுத்தி வருகிறது.

குறிப்புச் சொற்கள்