செம்பவாங் ரோட்டில் ஆகஸ்ட் 19ஆம் தேதி இரண்டு கார்கள் மோதிக்கொண்ட விபத்தின் தொடர்பில் 55 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் மது அருந்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அன்றிரவு மணி சுமார் 10.40க்குக் கேன்பரா ரோட்டை நோக்கிச் செல்லும் செம்பவாங் ரோட்டில் இரண்டு கார்கள் மோதிக்கொண்டதாகத் தகவல் கிடைத்தது என்று காவல்துறை தெரவித்தது.
கார் ஓட்டுநரான 40 வயது ஆடவருக்கும் அவருடன் சென்ற 45 வயதுப் பயணிக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டன. ஆனால் இருவரும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துவிட்டனர்.
விபத்து நேர்ந்ததைக் காட்டும் காணொளியொன்றை ஃபேஸ்புக்கில் எஸ்ஜி ரோட் விஜிலான்டே பதிவிட்டது. அதில் கறுப்புக் காரொன்று வலப்புறம் திரும்புகிறது. அப்போது போக்குவரத்து விளக்கில் வலப்புறம் திரும்பும் அம்புக்குறி பச்சையாக இருக்கிறது.
இன்னொரு கறுப்பு கார் முதல் காரின் இடப்புறத்தில் சந்திப்பை நோக்கிச் செல்கிறது. நேராகச் செல்வதைப் போல் தோன்றிய இரண்டாம் கார் முதல் காருடன் மோதியது.
காவல்துறையின் விசாரணை தொடர்கிறது.
காவல்துறைப் புள்ளிவிவரங்களின்படி, சென்ற ஆண்டு (2024) மது அருந்துவிட்டு வாகனம் செலுத்தியதற்காக 1,778 பேர் கைதுசெய்யப்பட்டனர். 2023ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் அந்த எண்ணிக்கை ஏறக்குறைய 7 விழுக்காடு அதிகம்.