செம்பவாங் கடற்கரையில் உள்ள நீரில் நுண்ணுயிரிகள் அதிகளவு இருப்பதால் அங்கு நீச்சல் பயிற்சிக்கு தேசியச் சுற்றுப்புற வாரியம் தடை விதித்துள்ளது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஓரளவுக்குப் பாதுகாப்பானது என மதிப்பிடப்பட்ட பாசிர் ரிஸ் கடற்கரை தற்போது நீச்சல் போன்ற கடல் சார்ந்த நடவடிக்கைகளுக்கு ஏற்ற நிலைக்கு மாறியிருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 24) வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.
அண்மையில் நடத்திய ஆய்வில், நீரின் தரம் மேம்பட்டுள்ளதாகக் கண்டறியப்பட்டதையடுத்து பாசிர் ரிஸ் கடற்கரையில் கடல் சார்ந்த விளையாட்டுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக வாரியம் அதில் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூரில் இருக்கும் ஏழு கடற்கரைகளில் மற்ற ஐந்து கடற்கரைகளான செந்தோசா, சிலேத்தார், பொங்கோல், ஈஸ்ட் கோஸ்ட் பூங்கா, சாங்கி ஆகியவை பாதுகாப்பானவை என மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், செம்பவாங் கடற்கரை ஓரளவு பாதுகாப்பானது என அண்மைய ஆய்வில் மதிப்பிடப்பட்டாலும் கடற்கரை நீரில் இரைப்பை அழற்சி தொடர்பான தொற்றை அதிகரிக்கும் ‘எண்டிரோகாக்கஸ்’ எனும் நுண்ணுயிரியின் அளவு உயர்ந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
செம்பவாங் கடற்கரைக்குச் செல்ல விரும்புவோர் நீச்சல் போன்ற முழு உடலோ முகமோ தொடர்ந்து நீருடன் தொடர்பில் இருக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் என வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது. இருப்பினும், படகோட்டம், நீர்ச் சறுக்கு போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவோர் தகுந்த பாதுகாப்புடன் கடற்கரையைப் பயன்படுத்தலாம் என்றும் அது அறிவுறுத்தியது.