செம்பவாங் குழுத்தொகுதி: சுகாதார அமைச்சர் ஓங் தலைமையில் களமிறங்குகிறது மசெக வேட்பாளர் அணி

3 mins read
d1905780-a600-4edb-9088-ef81f9d9e9ba
சுகாதார அமைச்சர் ஓங் யி காங்குடன் திரு விக்ரம் நாயர், திருவாட்டி மரியாம் ஜாஃபர், புதுமுகங்களான திரு கேப்ரியல் லாம், திரு இங் ஸி ஷுவன் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர். படத்தில் வலக்கோடியில் உள்ள திருவாட்டி போ லி சான், இம்முறை செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிடுகிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

செம்பவாங் குழுத்தொகுதிக்கான மக்கள் செயல் கட்சி வேட்பாளர் அணிக்குச் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் மீண்டும் தலைமை தாங்குகிறார்.

செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 22) செம்பவாங் பூங்காவில் இடம்பெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அமைச்சர் ஓங் இதை உறுதிப்படுத்தினார்.

அவருடன் திரு விக்ரம் நாயர், திருவாட்டி மரியாம் ஜாஃபர், புதுமுகங்களான திரு கேப்ரியல் லாம், திரு இங் ஸி ஷுவன் ஆகியோர் வேட்பாளர்களாகக் களமிறங்குகின்றனர்.

செம்பவாங் குழுத்தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் லிம் வீ கியாக் இந்தத் தேர்தலில் அங்குப் போட்டியிடவில்லை.

அவர் அரசியலிலிருந்நு ஓய்வுபெறுவாரா என்பது குறித்து இப்போது தெரிவிக்க முடியாது என்று அமைச்சர் ஓங் கூறினார்.

புதிதாக அமைக்கப்பட்டுள்ள செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் திருவாட்டி போ லி சான் போட்டியிடுகிறார்.

வேட்புமனுத் தாக்கல் தினத்திற்கு முன்னரே மக்கள் செயல் கட்சி வெவ்வேறு தொகுதிகளில் களமிறங்கும் வேட்பாளர்களின் பெயர்களை வெளியிட்டுவருகிறது. செம்பவாங் குழுத்தொகுதியுடன் இந்த நடைமுறை நிறைவுபெறும் என்றார் அமைச்சர் ஓங்.

ஆகவே, மக்கள் செயல் கட்சியின் தஞ்சோங் பகார், ஈஸ்ட் கோஸ்ட், பொங்கோல் குழுத்தொகுதிகளில் வேட்பாளர்களாக யார் களமிறங்கவுள்ளனர் என்பது வேட்புமனுத் தாக்கல் நாள்வரை தெரியாது.

ஏப்ரல் 13ஆம் தேதி இடம்பெற்ற சமூக நிகழ்ச்சி ஒன்றில் திரு ஓங், நான்கு தவணைகள் செம்பவாங்கில் சேவையாற்றிய டாக்டர் லிம் வீ கியாக்கிற்கு மரியாதை செலுத்தியிருந்தார்.

தேர்ந்தெடுக்கப்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குக் குடியிருப்பாளர்களின் அக்கறைகள் மீது கவனம் செலுத்தத் தயாராக இருப்பதாகத் திரு விக்ரம் நாயர் குறிப்பிட்டார்.

தமிழ்முரசின் கேள்விக்குப் பதிலளித்த அவர், “தமிழ்மொழி வாழும் மொழியாக இருக்க வேண்டும். சிங்கப்பூரில் தமிழ் ஆசிரியர்களின் எண்ணிக்கை பற்றாக்குறையாக இருக்கிறது. தமிழாசிரியர்கள் சங்கத்தின் ஆலோசகராக இதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுவருகிறேன். பாலர் பள்ளிகளிலும் கூடுதலான தமிழ் ஆசிரியர்கள் தேவை. இரண்டாவதாகத் தமிழ்மொழி கற்றல் வளர்ச்சி குழுவின் தலைவர் என்ற முறையில், வகுப்பறைக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் தமிழில் பேசுவதை ஊக்குவிக்க விரும்புகிறேன்,” என்றார்.

பல ஆண்டுகளாக அடித்தளத் தலைவராகச் சேவையாற்றிய திரு இங் இளையர்களின் நலன், மனநலன், உள்ளூர்த் தொழில்கள் ஆகியவற்றின் மீது அக்கறை கொண்டுள்ளதாகத் தெரிவித்தார்.

‘ஷாலோம் இன்டர்நேஷனல்’ எனும் நிறுவனத்தை நடத்திவரும் திரு கேப்ரியல் லாம், குடும்பங்கள் மீதும் வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பு தேவைப்படுவோர் மீதும் அக்கறை செலுத்த விரும்புகிறார்.

செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் போட்டியிடவிருக்கும் திருவாட்டி போ லி சான், குடியிருப்பாளர்களைத் தாம் நன்கு அறிந்துள்ளதாகச் சொன்னார்.

செம்பவாங்கிற்கான தேர்தல் வாக்குறுதிகள் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிடப்படும் என்று கூறிய அமைச்சர் ஓங், அதன் தொலைநோக்கு ‘ஒரு செம்பவாங்’ என்று தமிழில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

செம்பவாங் புதுப்பிப்புப் பணிகள்

செம்பவாங் பலவகைகளில் மேம்படுத்தப்படும் என்று விளக்கிய திரு ஓங், தற்போதுள்ள செம்பவாங் கப்பற்பட்டறை அடுத்த ஆண்டு துவாசுக்கு இடமாற்றப்படும் என்றார்.

“இந்தக் கப்பற்பட்டறை பகுதி மிகப் பெரிது. கப்பற்பட்டறையை இடமாற்றுவதன் மூலம் ஒரு பெரிய நிலப்பகுதி நமக்குக் கிடைக்கும். அதில் பல அம்சங்களைச் சேர்க்கலாம். எதிர்வரும் சிங்கப்பூர் - ஜோகூர் விரைவு ரயில் கட்டமைப்புக்கு அருகிலும் பல இடங்கள் உள்ளன. குடியிருப்பாளர்களுக்காக அந்த இடங்களில் பல அம்சங்களை அறிமுகம் செய்து செம்பவாங்கைப் பாதுகாப்போம்,” என்றார் திரு ஓங்.

குறிப்புச் சொற்கள்