தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செம்பவாங் குழுத்தொகுதி வேட்பாளர் குழு: அறிமுகம் செய்த சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி

2 mins read
e3b7b0f2-34f1-47d5-8c54-0a435ab11ed4
வேட்பாளர் குழுவின் அறிமுகத்திற்குப் பின் கம்போங் அட்மிரல்டியில் உள்ள உணவங்காடி நிலையத்தில் குடியிருப்பாளர்களைச் சந்திக்கும் (இடமிருந்து) ஜேம்ஸ் கோமெஸ், தமன்ஹுரி அபாஸ், பிரயன் லிம், ஆல்ஃபிரட் டான், சுரயா அக்பர். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தனது கட்‌சியின் சார்பில் செம்பவாங் குழுத்தொகுதியில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குழுவை சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி அறிமுகம் செய்துள்ளது.

அக்கட்சியின் கொள்கைத் துணைத் தலைவர் ஜேம்ஸ் கோமெஸ், கட்சித் துணைத் தலைவர் பிரயன் லிம், பொருளாளர் சுராயா அக்பர், கட்சி உறுப்பினர்கள் ஆல்ஃபிரட் டான், தமன்ஹுரி அபாஸ் ஆகியோர் அந்த ஐவர்.

கம்போங் அட்மிரல்டியில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர் பால் ஆனந்தராஜா தம்பையா, அவர்களை அறிமுகம் செய்துவைத்துப் பேசினார்.

அங்குள்ள உணவங்காடி நிலையத்தில் குடியிருப்பாளர்களுடன் உரையாடி தங்களுக்கு ஆதரவளிக்கும்படி அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

கொவிட்-19 பெருந்தொற்றின்போது நடந்த கடந்த தேர்தலில் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளின்றி இப்போது மக்களுடன் நேரடியாக உரையாட வாய்ப்பு கிடைத்துள்ளதாகச் சொன்ன பேராசிரியர் தம்பையா, அவர்களது பிரச்சினைகளைக் கேட்டறிந்து வருவதாகக் கூறினார்.

விலைவாசி உயர்வில் தாங்கள் கவனம் செலுத்தி வருவதாகக் குறிப்பிட்ட அவர், பற்றுச்சீட்டுகள், தள்ளுபடி உள்ளிட்ட தற்காலிகத் தீர்வுகளைத் தாண்டி நிரந்தரத் தீர்வுகளைக் கொண்டுவர வேண்டிய தேவையிருப்பதாகச் சொன்னார். பொருள், சேவை வரிக் குறைப்பு, சேவைக் கட்டணக் குறைப்பு உள்ளிட்டவை கொண்டுவரப்பட வேண்டும் என்றார் அவர்.

இவை குறித்த, தெளிவான கொள்கைகளை தமது கட்சி கொண்டுள்ளதாக பேராசிரியர் தம்பையா சொன்னார்.

வேட்பாளர் குழுவில் இடம்பெற்றுள்ள டாக்டர் ஜேம்ஸ் கோமெஸ், மருத்துவ, காப்புறுதிச் செலவுகள் என பல்வேறு பிரச்சினைகளை மக்கள் தன்னிடம் பகிர்ந்ததாகக் குறிப்பிட்டார்.

செம்பவாங் தொகுதியில் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் புதிய உத்தேச வேட்பாளர்

கம்போங் அட்மிரல்டியில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியினரை எதிர்கொண்டபோது, அவர்களுடன் அன்புடன் கைகுலுக்கி வாழ்த்தும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்பென்சர் இங் (வலது).
கம்போங் அட்மிரல்டியில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியினரை எதிர்கொண்டபோது, அவர்களுடன் அன்புடன் கைகுலுக்கி வாழ்த்தும் தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியின் பொதுச் செயலாளர் ஸ்பென்சர் இங் (வலது). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதற்கிடையே, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியும் செம்பவாங்கில் தொகுதி உலா சென்றது. அக்கட்‌சியின் தலைமைச் செயலாளர் ஸ்பென்சர் இங், தமது கட்‌சியைச் சேர்ந்த புதுமுகம் ஒருவரை அறிமுகம் செய்தார்.

தமது கட்‌சியின் சார்பில் நீச்சல் விளையாட்டுப் பயிற்றுவிப்பாளரும் தனியார் வாடகை கார் ஓட்டுநருமான திரு ரயன் சியா, 46, களமிறங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக திரு இங் சொன்னார்.

செம்பவாங் குழுத்தொகுதியில் தமது தலைமையின்கீழ் அணி செயல்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி குறைந்தது மூன்று புதுமுகங்களைக் களமிறக்கவுள்ளதாகவும் 30 முதல் 35 பேர் வரை தேர்தலில் போட்டியிடத் தயாராக உள்ளதாகவும் திரு இங் சொன்னார். பிற புதுமுகங்களைப் பின்னர் அறிவிக்கவுள்ளதாகவும் மும்முனைப் போட்டியைத் தவிர்க்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி செம்பவாங்கில் வேட்பாளர் குழுவைக் களமிறக்குவதற்கான காரணத்தைக் கண்டறிய, ஏப்ரல் 9 அல்லது 10ஆம் தேதி அக்கட்சியினரைச் சந்தித்து தாம் பேசவுள்ளதாக திரு இங் குறிப்பிட்டார்.

இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த டாக்டர் கோமெஸ், “பொதுவாகவே அனைத்துக் கட்சிகளையும் வரவேற்பதே அரசியல் முதிர்ச்சி. கட்சிகளின் கொள்கையையும் போட்டியிடுவோரின் ஆற்றலையும் பொறுத்து வாக்காளர் முடிவெடுப்பார்கள்,” என்று தெரிவித்தார்.

கம்போங் அட்மிரல்டியில் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியினரைச் சந்திக்க நேர்ந்தபோது, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சியினர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

குறிப்புச் சொற்கள்