செம்பவாங்கில் அடுத்த நான்காண்டுகளில் கூடுதல் பாலர் பள்ளிகள்: அமைச்சர் ஓங்

1 mins read
763c1c6c-9f83-4031-b12d-d668c5db5de0
 புக்கிட் கென்பரா ஒருங்கிணைந்த விளையாட்டு, சமூக நடுவத்தில் புதிய இரு வசதிகளைத் திறந்துவைத்தார் அமைச்சர் ஓங். - படம்:சாவ் பாவ்

செம்பவாங் குடியிருப்பாளர்கள் அடுத்த நான்கு ஆண்டுக்குள் அவ்வட்டாரத்தில் கூடுதல் பாலர் பள்ளிகள், புதிய தொடக்கப் பள்ளி, செம்பவாங் பெருவிரைவு ரயில் நிலையத்திற்குச் செல்ல கூரையுடன் கூடிய இணைப்புப் பாதை போன்ற புதிய மேம்பாடுகளை எதிர்பார்க்கலாம்.

வரவிருக்கும் இந்தப் புதிய வளர்ச்சிப் பணிகள் குறித்த தகவல்களை புக்கிட் கென்பரா ஒருங்கிணைந்த விளையாட்டு, சமூக நடுவத்தில் புதிய இரு வசதிகளைத் திறந்துவைத்தபோது அவ்வட்டாரத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும் சுகாதார அமைச்சருமான ஓங் யீ காங் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமையன்று (மார்ச் 23) நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய ஓங், ஈஸ்ட் கென்பராவில் மற்றொரு தொடக்கப் பள்ளியைக் கட்டும் தமது திட்டத்திற்குக் கல்வி அமைச்சு ஆதரவளிப்பதாகச் சொன்னார்.

இதற்காக அமைச்சுடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் அனைத்தும் சரியான பாதையில் சென்றால் 2029ஆம் ஆண்டுக்குள் தொடக்கப் பள்ளியின் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படுமெனவும் அமைச்சர் ஓங் தெரிவித்தார்.

பாலர் பள்ளிகளைக் குறித்து பேசுகையில், கென்பரா விஸ்தா, சன் சேல்ஸ் ஆகிய இரு தேவைக்கேற்ப கட்டப்படும் திட்டங்களில் புதிய நிலையங்கள் அமைக்கப்படும் எனக் கூறிய திரு ஓங், ஒவ்வொன்றிலும் 300 இடங்கள் இருக்கும் என்றார்.

மேலும், 400 இடங்கள் கொண்ட பெரிய பாலர் பள்ளி ஒன்று ஈஸ்ட் கென்பரா பகுதியில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இளங்குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் வகையில் செம்பவாங் வட்டாரத்தில் அடுத்த ஈராண்டுகளில் கூடுதாக 1,000 பாலர் பள்ளி இடங்கள் உருவாக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்