தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

களத்தில் தொடர்ந்து பணியாற்றுவோரை செம்பவாங் மக்கள் நன்கறிவர்: ஓங் யி காங்

2 mins read
996aad32-b188-4e14-87ea-6a800092efee
செம்பவாங் குழுத்தொகுதியில் கடந்த ஐந்தாண்டுகளில் நடைபெற்ற மேம்பாடுகள் குறித்துப் பேசும் அமைச்சர் ஓங் யி காங் (நடுவில்). அக்குழுத்தொகுதியின் (இடமிருந்து) உத்தேச மசெக வேட்பாளர் கேப்ரியல் லாம், நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், மரியம் ஜாஃபர், போ லி சான், உத்தேச வேட்பாளர் இங் ‌ஷி சுவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்.

செம்பவாங் குழுத்தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது என்றும் களத்தில் நின்று பணியாற்றுவோர் யார் என்பதை செம்பவாங் மக்கள் நன்கறிவர் என்றும் சுகாதார அமைச்சரும் செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான ஓங் யி காங் கூறியுள்ளார்.

செம்பவாங் குழுத்தொகுதி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 6) காலைமுதலே பரபரப்பாகக் காணப்பட்டதாகக் கூறிய அவர், மக்கள் செயல் கட்சி தனது மதிப்புகள், முந்தைய செயல்பாடுகள், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ளப்போவதாகக் குறிப்பிட்டார்.

எஸ்ஜி 60 தொடர்பில் செம்பவாங்கில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் அக்குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விக்ரம் நாயர், மரியம் ஜாஃபர், போ லி சான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், அத்தொகுதியின் புதிய உத்தேச வேட்பாளர்களாக அறிமுகம் செய்யப்பட்ட கேப்ரியல் லாம், இங் ‌ஷி சுவான் இருவரும் பங்கேற்றனர்.

மசெக வேட்பாளர்கள் உறுதிசெய்யப்பட சற்று காலமெடுக்கும் என்று சொன்ன அமைச்சர், அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் வீ கியாக் நிகழ்ச்சியில் பங்கேற்காததையும் அவர் போட்டியிடுவாரா என்பது குறித்த கேள்விக்கு மேடையில் உள்ளோரைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றும் பதிலளித்தார்.

தொகுதியில் மும்முனை, இருமுனை என எவ்வாறு போட்டி நிலவினாலும், மசெக முன்கூறிய மூன்றின் அடிப்படையில் தேர்தலை எதிர்கொள்ளும் என்றார் அவர்.

விளையாட்டுகள், உணவு, கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டிய விழாவில் மக்கள் முன்னிலையில் எம்.பி.க்களும் உத்தேச வேட்பாளர்களும் பேசினர்.

கடந்த ஐந்தாண்டுகளில் செம்பவாங் குழுத்தொகுதியில் இடம்பெற்ற மேம்பாடுகள் குறித்த அறிக்கையை முதன்முறையாக வெளியிட்டுள்ளதாக அமைச்சர் ஓங் கூறினார். மக்கள் அதனைப் படித்துப் பார்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அதில் குறிப்பிட்டுள்ள சிலவற்றைச் சுட்டிக்காட்டினார்.

புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை, புக்கிட் கேன்பரா ஒருங்கிணைந்த சமூக நடுவம், உட்லண்ட்ஸ் ஹெல்த் வளாகம் என உள்கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள புதிய மேம்பாடுகள் குறித்து அவர் பேசினார்.

கூரையுடன் கூடிய 134 நடைபாதைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதையும் இரு விளையாட்டு வளாகங்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளதையும் அவர் சுட்டினார்.

மூத்தோருக்கான சுகாதார முன்னெடுப்புகள், சமூகத் தோட்டம் என பலவும் அமைந்ததையும் அவர் சுட்டினார்.

இப்பகுதிக்கென தனித்துவம் இருப்பதாகவும் அதனைக் கட்டிக்காக்குமாறும் மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

‘எல்லாருக்குமான செம்பவாங்’ எனும் தொலைநோக்குப் பார்வையுடன் அடுத்த ஐந்தாண்டுகளுக்குப் பல்வேறு திட்டங்கள் உள்ளதாக அமைச்சர் ஓங் கூறினார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற இரு புதிய உத்தேச வேட்பாளர்களும் மக்கள் தங்களுக்கு அளிக்கும் வரவேற்பு மகிழ்ச்சியளிப்பதாகக் கூறினர். இருவரும் தாங்கள் மேற்கொண்ட தொண்டூழியம் குறித்தும் பேசினர்.

தங்கள் இருவருக்கும் தொழிலிலும் சேவையிலும் வெவ்வேறான அனுபவங்கள் இருப்பது, பல்வேறு பிரச்சினைகளை அணுகும் மாறுபட்ட கண்ணோட்டங்களை அளிக்கும் என்று கேப்ரியல் லாம் குறிப்பிட்டார்.

நலவாழ்வையும் வாழ்க்கைமுறையையும் ஊக்குவிக்க விழைவதாகவும் அப்பணியைத் தொடர்ந்து செய்ய விரும்புவதாகவும் இங் ‌ஷி சுவான் கூறினார்.

குறிப்புச் சொற்கள்