பொதுத் தாழ்வாரம், தரைத்தளம் போன்ற குடியிருப்புக் கட்டடங்களின் பொது இடங்களிலிருந்து தங்களுக்குச் சொந்தமான தனிநபர் நடமாட்டச் சாதனங்களை அப்புறப்படுத்துமாறு செம்பவாங் குடியிருப்பாளர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை அவர்கள் ஆகஸ்ட் 20ஆம் தேதிக்குள் செய்துவிட வேண்டும்.
கட்டடத்தின் பொது இடங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருக்கும் தங்களுக்குச் சொந்தமான தனிநபர் நடமாட்டச் சாதனங்களைக் குடியிருப்பாளர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தி தங்கள் வீட்டில் வைத்திருக்க வேண்டும்.
இதுதொடர்பான அறிவிப்புகளை செம்பவாங் டிரைவ் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழகக் குடியிருப்புக் கட்டடங்களின் தரைத்தளத்தில் செம்பவாங் நகர மன்றம் வைத்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் பேசிய குடியிருப்பாளர்கள் தெரிவித்தனர்.
தரைத்தளம், மின்தூக்கித் தளம், பொதுத் தாழ்வாரம் போன்ற மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களில் தனிநபர் நடமாட்டச் சாதனங்களை நிறுத்திவைக்கும்போது அதன் காரணமாக ஏற்படும் ஆபத்துகளை நகர மன்றம் மேற்கோள் காட்டியது.
குடியிருப்பாளர்கள் நடந்து செல்லும் பாதைகளை அவை மறிக்கக்கூடும் என்றும் அவசரநிலை ஏற்பட்டால், குடியிருப்பாளர்கள் விரைவாகத் தப்பிச் செல்ல முடியாத நிலை ஏற்படக்கூடும் என்றும் நகர மன்றம் எச்சரித்தது.
ஆகஸ்ட் 15ஆம் தேதியன்று செம்பவாங் வட்டாரத்தில் உள்ள வீவக குடியிருப்புக் கட்டடத்தின் தரைத்தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த மூன்று தனிநபர் நடமாட்டச் சாதனங்கள் தீப்பிடித்து எரிந்தன.
இதன் விளைவாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 35 குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

