உட்லண்ட்ஸ், கிராஞ்சி மற்றும் செம்பவாங்கை உள்ளடக்கிய சிங்கப்பூரின் வடபகுதியைப் பொலிவாக்குவதற்கான திட்டங்களை பிரதமர் லாரன்ஸ் வோங் விவரித்தார்.
சிங்கப்பூரின் நிலப்பகுதி சிறியது. எனவே, தற்போதைய நிலப் பகுதியை பொலிவூட்டவும் புதுப்பிக்கவும் அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.
அதன் ஒரு பகுதியாக, வடக்கு சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ், கிராஞ்சி, செம்பவாங் ஆகிய வட்டாரங்களுக்கான பெருந்திட்டத்தை நகர மறுசீரமைப்பு ஆணையம் வரைந்துள்ளது.
செம்பவாங்கும் செம்பவாங் கப்பல் பட்டறையும் மூத்த சிங்கப்பூரர்களின் நினைவில் பதிந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்.
அங்கு 1938ஆம் ஆண்டு கடற்படைத் தளத்தை பிரிட்டிஷ்காரர்கள் கட்டினார்கள். அவர்கள் வெளியேறிய பின்னர், அதனை நாம் செம்பவாங் கப்பல் பட்டறையாக மாற்றினோம். 1971ஆம் ஆண்டு, அப்போதைய அதிபர் ஷியர்ஸ் அதனை அதிகாரபூர்வமாகத் திறந்துவைத்தார்.
செம்பவாங் கப்பல் பட்டறை நமது ஆரம்பகால தொழில்மயத்தில் முக்கியப் பங்கு வகித்ததோடு, கடல் துறைத் தொழில் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தது.
அந்தக் கப்பல் பட்டறை மறுமேம்பாடு காண உள்ளது. அதற்கான இடவசதியை, ஆக்கபூர்வமான முறையில் மறுபயனீடு செய்ய பல வழிகள் உள்ளன.
அதற்காகப் பொதுமக்களிடம் இருந்து யோசனைகள் திரட்டப்பட்டு உள்ளன. அவற்றில் சிலவற்றை இப்போது தெரிவிக்கிறேன்.
தொடர்புடைய செய்திகள்
விளையாட்டு, இசை நிகழ்ச்சிகள், மேடை நிகழ்வுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம் அல்லது பொதுமக்கள் தங்களது குடும்பம், நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்களுடன் ஒன்றுகூடும் கடைத்தொகுதியாக அப்பகுதியை மாற்றலாம் என்பவை யோசனைகளில் சில.
ஒட்டுமொத்தக் கப்பல் பட்டறை வட்டாரமும் ஆகப் பெரியது. அங் மோ கியோ நகர மையத்தைப் போல கிட்டத்தட்ட மூன்று மடங்கு பெரியது அது. அந்தப் பகுதியில் வீடுகளையும் நீர்முகப்புகளையும் ஏற்படுத்த முடியும். உணவுக்கூடங்கள் மற்றும் கடைத்தொகுதிகளுடன் சமூக ஒன்றுகூடலுக்கான இடமாக அதனை மாற்றும் புதிய யோசனைகளும் உள்ளன.
இவை எல்லாம் ஒன்றுகூடி வந்தால் சிங்கப்பூரின் வடக்குப் பகுதி புதிய துடிப்புமிக்க நீர்முகப்பு வட்டாரமாகவும் மரபுடைமை வளமிக்க வட்டாரமாகவும் மாற்றம் காணும்.
அந்தப் பகுதியை மறுமேம்பாடு செய்யும் அதேநேரம் வளமான கடல்துறை அம்சங்களைப் பாதுகாக்கும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள் என்றார் பிரதமர்.

