செம்பவாங் வெஸ்ட்: போ லி சானை எதிர்த்துப் போட்டியிடும் சீ சூன் ஜுவான்

2 mins read
50855dab-7898-4921-a030-84e22c2a5ad9
சொங்ஃபூ பள்ளியில் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்தபின், திரண்டிருந்த ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய மக்கள் செயல் கட்சி வேட்பாளர் போ லி சான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

வரும் பொதுத் தேர்தலில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் மக்கள் செயல் கட்சியின் சார்பில் போ லி சானும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவானும் மோதுகின்றனர்.

வேட்புமனுத் தாக்கல் நாளான புதன்கிழமை (ஏப்ரல் 23) சொங்ஃபூ பள்ளியில் அவர்கள் இருவரும் தங்களது வேட்புமனுக்களைத் தாக்கல் செய்தனர்.

செம்பவாங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து செம்பவாங் வெஸ்ட் வட்டாரத்தைப் பிரதிநிதித்துவந்த திருவாட்டி போ, புதிய தொகுதி எல்லை வரையறுக்கப்பட்டதையடுத்து இத்தனித் தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2020ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலில் அப்போதைய கல்வி அமைச்சர் ஓங் யி காங் தலைமையிலான ஐவர் அணியில் போ லி சான் இடம்பெற்று வென்றார். 

வேட்புமனுத் தாக்கலைத் தொடர்ந்து மக்களைச் சந்தித்த அவர், “கடந்த ஐந்தாண்டுகளாகத் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றி வந்துள்ளோம். அதனைத் தொடர்வோம்,” என்றார். தமது இரண்டாம் அத்தியாயத்தைத் தொடங்க அனைவரும் தமக்கு வாக்களிக்க வேண்டுமென அவர் கேட்டுக்கொண்டார்.

செம்பவாங்  குழுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடன் வேட்புமனுத் தாக்கலை முடித்துவிட்டுத் திரும்பும் செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி வேட்பாளரும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளருமான சீ சூன் ஜுவான்.
செம்பவாங் குழுத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஆதரவாளர்களுடன் வேட்புமனுத் தாக்கலை முடித்துவிட்டுத் திரும்பும் செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி வேட்பாளரும் சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சியின் தலைமைச் செயலாளருமான சீ சூன் ஜுவான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இதனிடையே, “சிங்கப்பூர் மக்கள் அச்சத்துடன் வாழ்வதை விடுத்து, நம்பிக்கையுடன் வாழ வேண்டும். சிரமத்துடன் வாழ்வதை விடுத்து முன்னேற்றப் பாதையில் பயணம் செய்யவேண்டும். அதற்காக எனக்கு வாக்களிக்க வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார் திரு சீ சூன் ஜுவான்.

அவர் கடந்த 2020ஆம் ஆண்டுத் தேர்தலில் புக்கிட் பாத்தோக் தனித்தொகுதியில் திரு முரளி பிள்ளையை எதிர்த்துப் போட்டியிட்டு 45.2 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.

முன்னதாக, தேசிய ஒருமைப்பாட்டுக் கட்சி செம்பவாங் வெஸ்ட் தொகுதியில் போட்டியிடாமல் விலகிக்கொள்வதாக அறிவித்திருந்தது.

தேர்தல் தொகுதி எல்லைகள் மறுஆய்வுக் குழுவின் அறிக்கைப்படி, புதிய செம்பவாங் வெஸ்ட் குழுத்தொகுதியில் 24,153 வாக்காளர்கள் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்