சிங்கப்பூர் ஜனநாயகக் கட்சி (சிஜக) தலைமைச் செயலாளர் சீ சூன் ஜுவான், கொள்கைகள் பற்றி தம்முடன் கலந்துரையாடுவதற்கு உட்லண்ட்ஸ் மார்ட் கடைத்தொகுதியில் உட்கார்ந்து காலை உணவு சாப்பிட சுகாதார அமைச்சர் ஓங் யி காங்குக்கும், செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதி மக்கள் செயல் கட்சி (மசெக) வேட்பாளர் போ லி சானுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
எவர்கிரீன் தொடக்கப்பள்ளியில் சனிக்கிழமை (ஏப்ரல் 26) இரவு இடம்பெற்ற சிஜகவின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் டாக்டர் சீ, அண்மையில் பிரதமர் லாரன்ஸ் வோங்கின் பிரசாரக் கூட்டத்தில் திரு ஓங்கும் திருவாட்டி போவும் தம்மைப் பற்றி இழிவாகப் பேசியதைச் சுட்டினார்.
“புக்கிட் பாத்தோக் தொகுதியைக் கைவிட்டு செம்பவாங் வெஸ்ட் தனித்தொகுதியில் நான் போட்டியிடுவதற்கான காரணத்தை அவ்விருவரும் கேட்டனர். ஆனால், தேர்தல் தொகுதி எல்லைகள் மாற்றம் செய்யப்பட்டதில் நான் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை அவர்கள் உணரவில்லை,” என்று டாக்டர் சீ கூறினார்.
ஒன்பது ஆண்டுகளாக புக்கிட் பாத்தோக் குடியிருப்பாளர்களுக்காகக் கடுமையாக உழைத்து அவர்களின் கவலைகளுக்குப் பேரளவில் தாம் குரல்கொடுத்து வந்ததாகக் குறிப்பிட்ட டாக்டர் சீ, அமைச்சர் ஓங்கும் திருவாட்டி போவும் தம்மை மரியாதை குறைவாகப் பேசுவதை நிறுத்த வேண்டும் என எச்சரித்தார்.
“திருவாட்டி போ என்னைக் குறைகூறியது எனக்கு மிகவும் வியப்பளிக்கிறது. அப்படியென்றால், 2011 பொதுத் தேர்தலில் அல்ஜுனிட் குழுத்தொகுதியில் போட்டியிட்டு காணாமல்போன திரு ஓங், ஏன் பிறகு செம்பவாங் குழுத்தொகுதிக்கு வந்தார் என்பதற்கான காரணம் எனக்குத் தெரிய வேண்டும்,” என வினவினார் டாக்டர் சீ.
“அவ்விருவரும் இன்னொருவரைக் குறைகூறாமல் சிங்கப்பூரர்களின் முக்கியப் பிரச்சினைகளில் கவனம் செலுத்தினால் சிறப்பு,” என்றார் அவர்.
சிஜகவின் பிரசாரத்தைக் காண நூற்றுக்கணக்கானோர் வார இறுதியில் திரண்டனர்.
சிவப்பு நிற உடைகளில் வந்திருந்த பெரும்பாலானோர், அக்கட்சியின் முத்திரை கொண்ட சிவப்புக் கொடிகளைக் கைகளில் ஏந்தி, சிவப்பு விளக்குகளை ஏந்தியபடி ஆரவாரத்துடன் காணப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
பிரசாரம் நடந்த அதேநேரத்தில், கட்சித் தொண்டர்கள் கூடம் அமைத்து டாக்டர் சீயின் நூல்கள், கட்சியின் சின்னம் பொறித்த பொருள்களை விற்றனர்.
தன்னால் முடிந்தவரை செம்பவாங் வெஸ்ட்டில் இருக்கும் 108 வீவக வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்களைச் சந்தித்துப் பேசவிருப்பதாகச் சொன்ன டாக்டர் சீ, செம்பவாங் வெஸ்ட் குடியிருப்பாளர்களுக்கான திட்டங்களையும் விளக்கினார்.
“இந்த இடத்தில் பசுமை நிறைந்த இடங்கள் அதிகமில்லை. உங்களின் மனநலனைக் காக்க நான் நிச்சயம் கூடுதல் முயற்சி செய்வேன். மசெகவை விஞ்சும் அளவுக்கு நான் உங்களுக்கு சேவையாற்றுவேன்,” என்று டாக்டர் சீ உறுதியளித்தார்.
செம்பவாங் வெஸ்ட்டில் சிஜக வென்றால் செம்பவாங் வெஸ்ட் தனித்தீவாக மாறிவிடும் என்று அமைச்சர் ஓங் அண்மையில் கூறியதைச் சுட்டிய டாக்டர் சீ, செம்பவாங் வெஸ்ட் பசுமைச் சோலையாக மாறும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
“அன்றாடம் உங்களின் கவலைகளைக் கேட்டறிய ஒருவர் வேண்டும். மசெக எம்.பி.க்களைக் காண பல மணி நேரம் நீங்கள் காத்திருக்கத் தேவையில்லை. நான் ‘டவுன் ஹால்’ சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்வேன்,” என்றார் அவர்.
டாக்டர் சீ பேசுவதற்கு முன்னர் சிஜக தலைவர் பால் தம்பையா பேசினார். சிங்கப்பூர் முன்னேற்றக் கட்சி (சிமுக) தலைவர் டான் செங் போக் பற்றிப் பேசிய டாக்டர் தம்பையா, சிமுகவுக்கும் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்டுக்கொண்டார்.
“டாக்டர் சீ பல இன்னல்களைச் சந்தித்தவர். அவர் உங்களுக்காக குரல்கொடுப்பவர்,” என்றார் டாக்டர் தம்பையா.
“முதல்முறையாக நான் சிங்கப்பூரில் ஒரு தேர்தல் பிரசாரத்தைக் காண வந்தேன். என்னால் வாக்களிக்க முடியாமல் இருந்தாலும் இந்த அனுபவம் மிக வித்தியாசமாக இருந்தது,” என்றார் நிரந்தரவாசியான சுந்தரி, 54.