இந்தியாவின் சூரிய சக்தி நிறுவனமான ரினியூ சன் பிரைட் (ReNew Sun Bright) நிறுவனத்தைச் செம்ப்கார்ப் குழுமம் வாங்கியுள்ளதாக வெள்ளிக்கிழமை (டிசம்பர் 26) அறிவித்துள்ளது.
ரினியூ சன் பிரைட் நிறுவனத்தை $246 மில்லியனுக்கு வாங்கியதன் மூலம் 2028ஆம் ஆண்டுக்குள் கிட்டத்தட்ட 25 கிகாவாட் இயற்கை எரிசக்தியை உற்பத்தி செய்யவேண்டும் என்ற இலக்கை நோக்கி செம்ப்கார்ப் குழுமம் இன்னும் நெருங்கியுள்ளதாக நிபுணர்கள் குறிப்பிட்டனர்.
2028ஆம் ஆண்டுக்குள் ஒரு மணி நேரத்தில் உற்பத்தியாகும் எரிசக்தி மூலம் வெளியேறும் கரிமத்தை 0.15 டன்னுக்குள் வைத்திருக்கவேண்டும் என்றும் செம்ப்கார்ப் இலக்கு கொண்டுள்ளது.
இந்தியாவின் ராஜஸ்தானில் 300 மெகாவாட் சூரிய சக்தி ஆலையை ரினியூ சன் பிரைட் நிறுவனம் நடத்துகிறது. அந்த நிறுவனம் 2021ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வர்த்தக ரீதியான செயல்பாடுகளைத் தொடங்கியது. மகாராஷ்டிர மாநில மின்சார விநியோக நிறுவனத்துடன் செய்துகொண்ட 25 ஆண்டுகால மின்சாரக் கொள்முதல் உடன்பாட்டின்கீழ் ரினியூ பிரைட் நிறுவனம் செயல்படுகிறது.
நிறுவனத்தை வாங்கியது இந்தியாவின் முதலீட்டு இலக்குடன் ஒத்துப்போகிறது என்று செம்ப்கார்ப் குழுமம் குறிப்பிட்டது.
2024 நிதியாண்டில் இயற்கை எரிசக்தி வரிகள் போக 17 விழுக்காட்டு லாபத்தைக் கொடுத்ததாகக் குழுமம் சொன்னது. அது 2028ஆம் ஆண்டு 23 விழுக்காடு வரை வளர்ச்சிக் காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் உள்ள செம்ப்கார்ப்பின் இயற்கை எரிசக்தி ஆற்றல் 7.6 கிகாவாட்டிற்கு மேல் அதிகரித்துள்ளது. அனைத்துலக அளவில் இயற்கை எரிசக்திக்கான திறன் 20.2 கிகாவாட்டாக உள்ளது.
அக்டோபர் மாதத்தில் சிங்கப்பூரின் ஆகப் பெரிய நிலத்தில் பதிக்கப்பட்ட சூரிய சக்தித் திட்டத்தைச் செம்ப்கார்ப் நிறுவனம் அறிவித்தது. ஜூரோங் தீவின் சூரிய சக்திப் பண்ணையில் அமைந்துள்ள அது 118 மெகாவாட் எரிசக்தியை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டுள்ளது.

