தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

செம்ப்கார்ப்: ஆண்டு முற்பாதி லாபம் 1% சரிவு

2 mins read
பங்குகளின் விலை 12% வீழ்ச்சி
453385a6-b714-4464-9f54-81ece605b37a
செம்ப்கார்ப் அதன் பங்குகளுக்கான இடைக்கால லாப ஈவுத் தொகையை 9 காசுக்கு உயர்த்தியுள்ளது. சென்ற ஆண்டு அது 6 காசாக இருந்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

‘செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ்’, இந்த ஆண்டின் (2025) முற்பாதியில் $536 மில்லியன் நிகர லாபம் ஈட்டியதாகத் தெரிவித்துள்ளது.

சென்ற ஆண்டு முற்பாதியுடன் ஒப்புநோக்க இது ஒரு விழுக்காடு குறைவு.

எரிவாயு விற்பனை குறைந்தது இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

இவ்வேளையில், பங்குதாரர்களுக்கு இடைக்கால லாப ஈவுத் தொகையாக ஒரு பங்கிற்கு 9 காசுகள் வழங்கப்படும் என்றும் ஆகஸ்ட் 26ஆம் தேதி அந்தத் தொகை வழங்கப்படும் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. சென்ற ஆண்டு அது 6 காசாக இருந்தது.

இந்த ஆண்டு முற்பாதியில் நிறுவனத்தின் வருவாய் 8 விழுக்காடு குறைந்து $2.9 பில்லியனாகப் பதிவானது. சென்ற ஆண்டு முற்பாதியில் அது $3.2 பில்லியன் வருவாய் ஈட்டியது.

வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 8) காலை 9.33 மணிக்கு செம்ப்கார்ப் பங்குகளின் விலை 12.3 விழுக்காடு ( அதாவது 96 காசு) குறைந்து $6.84ஆக இருந்தது.

எரிவாயு, அதனுடன் தொடர்புடைய சேவைகள் மூலம் கிட்டிய வருவாய் குறைந்ததும் கழிவு நிர்வாகத் துணை நிறுவனமான ‘செம்ப்கார்ப் என்வையர்மெண்ட்’ விற்கப்பட்டுவிட்டதால் அதன் பங்களிப்பு இல்லாததும் நிறுவனத்தின் வருவாய்ச் சரிவுக்கு முக்கியக் காரணங்களாகக் கூறப்பட்டது.

மேலும், இந்தியாவில் உள்ள நிலக்கரி வர்த்தகத்தை ஓமானைச் சேர்ந்த கூட்டு நிறுவனத்துக்கு விற்கும்போது அந்நியச் செலாவணி இழப்பு ஏற்பட்டதாகவும் செம்ப்கார்ப் கூறியது.

இவ்வேளையில், செம்ப்கார்ப்பின் ஒருங்கிணைந்த நகர்ப்புறத் தீர்வுகள் பிரிவு, நிலையான நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது. இந்தோனீசியாவில் அதிகரித்த நில விற்பனை, சீனாவில் மேற்கொள்ளப்பட்ட தண்ணீர் வர்த்தகத்தில் மேம்பட்ட வருவாய் ஆகியவை இதற்குக் காரணங்கள்.

பொருளியல் நிச்சயமற்றதன்மைக்கு இடையிலும் நிறுவனம் இந்த ஆண்டின் முற்பாதியில் மீள்திறனுடன் செயல்பட்டிருப்பதாக செம்ப்கார்ப் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி வோங் கிம் யின் கூறினார்.

2028ஆம் ஆண்டையும் அதற்குப் பிந்தைய காலகட்டத்தையும் நோக்கிய உத்திபூர்வ திட்டங்களைச் செயல்படுத்தும் விதமாக வர்த்தக வளர்ச்சியிலும் அதை வலுப்படுத்துவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தப்படும் என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்