தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

நகர்ப்புறக் கரிமக் குறைப்பு முயற்சித் திட்டங்களில் $700 மில்லியன் முதலீடு செய்யும் செம்ப்கார்ப்

2 mins read
c85f9bf4-5ea3-413a-9086-9671a1817f2b
ஆசிய அளவில் கரிம வெளியேற்றம் குறைந்த தொழில்துறைப் பூங்காக்களில் முன்னணி வகிக்கும் நிறுவனமாக நிறுவிக்கொள்வதில் செம்ப்கார்ப் கவனம் செலுத்துகிறது. - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

செம்ப்கார்ப் நிறுவனம், ஒருங்கிணைந்த நகர்ப்புறத் தீர்வுகளுக்காக ஏறக்குறைய $700 மில்லியனை முதலீடு செய்யவிருப்பதாக ஆகஸ்ட் 6ஆம் தேதி தெரிவித்துள்ளது.

ஆசிய அளவில் கரிம வெளியேற்றம் குறைந்த தொழில்துறைப் பூங்காக்களில் முன்னணி வகிக்கும் நிறுவனமாகத் தன்னை நிறுவிக்கொள்வது அதன் நோக்கம்.

அதற்கான உத்திபூர்வத் திட்டத்தையும் இந்த ஆண்டின் முற்பாதிக்கான லாப நிலவரத்தையும் செம்ப்கார்ப் ஒருங்கே அறிவித்தது.

நிறுவனத்தின் லாபம் இந்த ஆண்டின் முற்பாதியில் 11 விழுக்காடு குறைந்து $540 மில்லியனாகப் பதிவானது. சென்ற ஆண்டின் முற்பாதியில் அது $608 மில்லியனாக இருந்தது.

ஆண்டு முற்பாதிக்கான வருவாய் 12 விழுக்காடு சரிந்து $3.2 பில்லியனாகப் பதிவானதாகத் தெரிவிக்கப்பட்டது.

குழுமத் தலைவரும் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியுமான வோங் கிம் யின், செம்ப்கார்ப் இந்த ஆண்டின் முற்பாதியில் மீள்திறன் மிக்க லாபத்தைப் பெற்றுள்ளதாகக் கூறினார்.

எரிசக்தி உருமாற்றத்தில் சந்தை வாய்ப்புகளைக் கைப்பற்றும் விதமாக நிறுவனம், 2028ஆம் ஆண்டு வரையிலான அதன் உத்திகளைத் தொடர்ந்து செயல்படுத்தும் என்றார் அவர்.

இவ்வேளையில், குழுமத்தின் வருவாய் ஈட்டும் திறன் மீதான நம்பிக்கையில், செம்ப்கார்ப் நிறுவனம் ஒவ்வொரு பங்குக்கும் ஆறு காசு இடைக்கால ஈவுத்தொகையை அறிவித்துள்ளது. ஆகஸ்ட் 22ஆம் தேதி அது வழங்கப்படும். சென்ற ஆண்டு வழங்கப்பட்ட ஈவுத்தொகையைவிட இது ஒரு காசு அதிகம்.

ஆண்டின் பிற்பாதியில், எரிவாயு, அது தொடர்பான சேவைகளுக்கான பிரிவு அதிக வருவாய் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்க்கும் திறனும், வேலைகளை உருவாக்கும் ஆற்றலும் செம்ப்கார்ப் நிறுவனத்தைப் பழைய, புதிய சந்தைகளில் புதிய திட்டங்களைப் பெறுவதற்கு வலுவான நிலையில் வைத்திருப்பதாகக் கூறப்பட்டது.

வருவாயை மேம்படுத்தும் வகையில் வியட்னாமிலும் இந்தோனீசியாவிலும் நகர்ப்புற வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சி காணும் வேளையில் சீனாவில் வர்த்தகத்தை மேம்படுத்தவும் புதிய சந்தைகளில் வாய்ப்புகளை ஆராயவும் முயல்வதாக செம்ப்கார்ப் கூறியது.

குறிப்புச் சொற்கள்