புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி மற்றும் நகரத் தீர்வுகள் பிரிவுகளில் வலுவான செயல்திறன் இருந்தபோதிலும், எரிவாயு மற்றும் அது சார்ந்த சேவைகள் பிரிவில் வருவாய் குறைந்ததால், செம்ப்கார்ப் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இரண்டாம் பாதி மற்றும் முழு ஆண்டு லாபத்தில் சிறு சரிவு ஏற்பட்டுள்ளது.
டிசம்பர் வரையிலான ஆறு மாதங்களில், நிகர லாபம் 5 விழுக்காடு சரிந்து $448 மில்லியனாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் அது $473 மில்லியனாகப் பதிவானது.
இரண்டாம் பாதியில் வருவாய் 11 விழுக்காடு குறைந்து $2.9 பில்லியனாக பதிவாகியுள்ளது.
சிங்கப்பூரில் மின்சாரத் தேவை மற்றும் எரிவாயு விலைகள் குறைந்தது லாபச் சரிவுக்கு ஒரு முக்கியக் காரணமாகும். மேலும், பிரிட்டனில் உள்ள அதன் வில்டன் 10 மின் நிலையத்தில் ஏற்பட்ட பெரிய மின்தடை பாதிப்பையும் ஏற்படுத்தியது.
இருப்பினும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் எரிசக்திக்கான தேவை அதிகரித்து வருவதாகவும் குறிப்பாகத் தரவு மையங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் வளர்ச்சியை ஆதரிப்பதில் செம்ப்கார்ப் நிறுவனத்திற்குப் பெரும் வாய்ப்புகள் இருப்பதாகவும் அதன் குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி வோங் கிம் யின் தெரிவித்துள்ளார்.
செம்ப்கார்ப் நிறுவனம் ஒரு பங்கிற்கு 16 காசுகள் இறுதி லாபப் பங்காகப் பரிந்துரைத்துள்ளது.
2025ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வழங்கப்பட்ட 9 காசுகள் இடைக்கால லாபப் பங்குடன் சேர்த்து, 2025ஆம் ஆண்டிற்கான மொத்த லாபப் பங்கு 25 காசுகள் ஆகும். இது 2024ஆம் ஆண்டைவிட (23 காசுகள்) 9 விழுக்காடு அதிகமாகும்.
2025ஆம் ஆண்டு முழு ஆண்டிற்கான நிகர லாபம் மூன்று விழுக்காடு குறைந்து $984 மில்லியனாக இருந்தது. ஒட்டுமொத்த வருவாய் 10 விழுக்காடு சரிந்து $5.8 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.

