சிங்கப்பூரில் கால்பதித்த முன்னணி நுண்சில்லு நிறுவனம்: 700 புதிய வேலைகள் உருவாகும்

2 mins read
b0427104-d5dd-4a9d-861f-c9979b1f5cc4
பாசிர் ரிஸ்ஸில் ஏப்ரல் 1ஆம் தேதி திறக்கப்பட்ட யுஎம்சி நிறுவனம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பகுதி மின்கடத்தி (செமி கண்டக்டர்) நுண்சில்லுகளைத் தயாரிக்கும் நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் ‘யுனைடெட் மைக்ரோஎலெக்ட்ரானிக்ஸ் கார்ப்’ (UMC) சிங்கப்பூரில் தனது புதிய உற்பத்திக்கூடத்தைத் திறந்து உள்ளது.

பாசிர் ரிஸ் வட்டாரத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி திறக்கப்பட்ட அந்தத் தைவானிய நிறுவனக் கிளை மூலம் சிங்கப்பூரில் அடுத்த சில ஆண்டுகளில் ஏறக்குறைய 700 புதிய வேலைகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு திறக்கப்பட்டு உள்ள தொழிற்சாலை பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்படும்.

அதன் முதல் இரு கட்டங்களுக்கு மட்டும் US$5 பில்லியனை (S$6.7 பில்லியன்) அந்த நிறுவனம் ஒதுக்கி உள்ளது.

முதலாவது கட்டத்தின் பெரிய அளவிலான உற்பத்தி 2026ஆம் ஆண்டில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தத் தொழிற்சாலை அந்நிறுவனத்தின் மொத்த உற்பத்தியையும் இங்கு கொண்டு வரும். அப்போது ஒரு மில்லியன் நுண்சில்லுகளை உற்பத்தி செய்யும் ஆற்றலை அது பெறும்.

இதர நிறுவனங்களுக்கு நுண்சில்லுகளை உற்பத்தி செய்து தரும் குத்தகை நிறுவனமாகவும் அது செயல்படும்.

தற்போது நடப்பில் உள்ள நுண்சில்லுகளைக் காட்டிலும் அதிநவீன நுண்சில்லுகளைத் தயாரிப்பதில் சிங்கப்பூர் கிளை நிறுவனம் கவனம் செலுத்தும் என்று யுஎம்சியின் சிங்கப்பூர் பிரிவின் மூத்த இயக்குநர் தாமஸ் டே ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் கூறினார்.

“கைப்பேசி முதல் கார் மற்றும் தரவு நிலையங்கள் வரை நுண்சில்லுகளில் இயங்கக்கூடியவை. அதனால், நுண்சில்லுகளுக்கான தேவை பெருகி வருகிறது. அதற்கேற்ப போட்டியும் அதிகரிக்கிறது.

“சீனா போன்ற நாடுகளில் இருந்து வரும் போட்டிகளுக்கு இடையே நிறுவனத்தை நடத்த வேண்டிய அவசியம் உள்ளது. சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் நுண்சில்லுகள் அதிநவீன கைப்பேசித் திரைகளுக்குப் பயன்படுத்தப்படும்.

“அடுத்த தலைமுறை தொடர்புமுறைக்கான நுண்சில்லுகளாகவும் அது இருக்கும்,” என்றார் அவர்.

குறிப்புச் சொற்கள்