ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளில் பகுதிமின்கடத்தி துறை $500 மில்லியன் முதலீடு

ஆய்வு, மேம்பாட்டுப் பணிகளில் பகுதிமின்கடத்தி துறை $500 மில்லியன் முதலீடு

படம்: ராய்ட்டர்ஸ்

28 Sep 2026 - 7:13 pm

2 mins read

சிங்கப்பூரில் பகுதிமின்கடத்தித் துறையைச் சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக, 2026ஆம் ஆண்டிலிருந்து தொடங்கும் ஐந்து ஆண்டுகளுக்கு $500 மில்லியனுக்கும் அதிகமான நிதியை முதலீடு செய்ய அத்துறை சார்ந்த நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன.

ஏஸ்டார் அமைப்பு வெளியிட்டுள்ள தகவலின்படி, இது 2020ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை இத்தகைய முயற்சிகளுக்காகச் செலவிடப்பட்ட $400 மில்லியனைக் காட்டிலும் கூடுதலான தொகையாகும். உலகளவில் கணினிச் சில்லு உற்பத்திப் போட்டி தீவிரமடைந்து வரும் சூழலில், அதிநவீன சில்லுத் தொழில்நுட்பங்களில் தனது முன்னணியைப் பலப்படுத்தவும் அதிக மூலதனம் தேவைப்படும் இத்துறையில் உள்ளூர் நிறுவனங்கள் உலகளவில் போட்டியிட உதவி செய்யவும் சிங்கப்பூர் இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

சிங்கப்பூரின் கட்டமைப்பு குறித்து பேசிய ஏஸ்டார் நிறுவனத்தின் புத்தாக்கம், தொழில்முனைவுப் பிரிவின் துணைத் தலைமை நிர்வாகி பேராசிரியர் யோ யீ சியா, அனைத்துலக அளவில் மிகவும் சீரமைக்கப்பட்ட, ஒருங்கிணைந்த ஒரு தொழில் சூழல் அமைப்பைச் சிங்கப்பூர் கொண்டுள்ளது என்று குறிப்பிட்டார். நிறுவனங்கள் தங்கள் ஆய்வு, மேம்பாடு மற்றும் வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்கும்போது, சிங்கப்பூரின் இந்தச் சீரிய அமைப்பே முதன்மை வேறுபாட்டைக் காட்டும் காரணமாகத் திகழும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

சிங்கப்பூரில் பகுதிமின்கடத்தி உற்பத்தி மற்றும் ஆராய்ச்சித் துறைகளில் பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வரும் தீவிர முதலீடுகளின் விளைவாக, உலகளவில் உற்பத்தியாகும் சில்லுகளில் பத்தில் ஒன்று சிங்கப்பூரிலேயே தயாரிக்கப்படுகிறது. இருப்பினும், கணினிகளின் வேகத்தை அதிகரிக்கும் வழக்கமான முறைகளில் தடங்கல்கள் ஏற்பட்டு வரும் அதேவேளையில், செயற்கை நுண்ணறிவின் அபார வளர்ச்சி சில்லு தயாரிப்பாளர்களிடம் புதிய சவால்களையும் எதிர்பார்ப்புகளையும் உருவாக்கியுள்ளது.

குறிப்புச் சொற்கள்
முதலீடுபகுதி மின்கடத்திஏ*ஸ்டார்