தமிழ் கற்றலின் வளர்ச்சி, தமிழாசிரியர்கள் கடந்துவந்த பாதை, எதிர்கொள்ள உள்ள புதிய சவால்களை எடுத்துரைக்கும் விதமாக ‘சிங்கப்பூர் தமிழும் தமிழாசிரியர்களும்’ கருத்தரங்கு சனிக்கிழமை (மே 23) நடைபெற்றது.
சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் 75ஆம் ஆண்டுவிழா, ‘எஸ்ஜி60’ கொண்டாட்டங்கள் ஆகியவற்றின் ஒரு பகுதியாக அந்தக் கருத்தரங்கு நடைபெற்றது.
சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்தின் (சிண்டா) தலைமை நிர்வாகி அன்பரசு ராஜேந்திரன் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
தமிழ்மொழியைக் கற்பிப்பது மட்டும் ஒரு தமிழாசிரியரின் பொறுப்பல்ல என்றார் திரு அன்பரசு.
“மாணவர்களுக்கு ஏற்ற முறையில் தமிழ்மொழியைக் கொண்டுசேர்த்து அவர்களுக்கு மொழி மீதான பற்று தொடர்ந்து வளர உறுதிசெய்ய வேண்டும்,” என்று தமது உரையில் அவர் தெரிவித்தார்.
ஆண்டர்சன் சிராங்கூன் தொடக்கக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கில் கிட்டத்தட்ட 200 ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
தேசியக் கல்விக்கழகத்தில் தற்போது பயிற்சி பெற்றுவரும் ஏறத்தாழ 60 இளம் தமிழாசிரியர்களும் கருத்தரங்கில் பங்குபெற்றது மற்றொரு சிறப்பம்சம்.
தமிழை வாழும் மொழியாகக் கட்டிக்காப்பது பல தமிழாசிரியர்களின் நீண்டநாள் இலக்காக இருந்து வந்துள்ளது என்றார் சிங்கப்பூர்த் தமிழாசிரியர் சங்கத்தின் தலைவர் தனபால் குமார்.
தொடர்புடைய செய்திகள்
“தமிழ் ஆசிரியர்கள் இப்போது முன்னோக்கிச் சென்று, வரவிருக்கும் சவால்களுக்குத் தயாராக வேண்டும்,” என்றார் அவர்.
‘நேற்று-இன்று-நாளை’ என்ற கருப்பொருளை ஒட்டி நடைபெற்ற கருத்தரங்கில் உரையாற்றினார் நிகழ்ச்சியின் ஆலோசகரான பேராசிரியர் சுப. திண்ணப்பன்.
தம்மிடம் பயின்ற மாணவர்கள் இப்போது தமிழாசிரியர்களாக தம்முன் அமர்ந்திருப்பது மனத்திற்கு மகிழ்ச்சி தருவதாகக் கூறினார் பேராசிரியர் திண்ணப்பன்.
மேலும், தமிழ்த்துறையில் ஆற்றிய அளப்பரிய அர்ப்பணிப்புகளுக்குப் பேராசிரியர் திண்ணப்பன் சிறப்பிக்கப்பட்டார்.
இணைப் பேராசிரியர் சீதாலட்சுமி, முனைவர் வேணுகோபால், திரு சுப்பிரமணியம் நடேசன், திரு சிவராஜன் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகக் கலந்துகொண்டு, மொழி, தமிழாசிரியர்கள் வளர்ச்சிக்கான தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனட்.
கருத்தரங்கின் இறுதியில் அனைத்துப் பேச்சாளர்களும் பங்கேற்ற கேள்வி-பதில் அங்கமும் இடம்பெற்றது.
செயற்கை நுண்ணறிவின் தாக்கம் வகுப்பறைகளையும் விட்டுவைக்கவில்லை என்றும் அது இன்றைய ஒரு மிகப் பெரிய சவால் என்றும் சொன்னார் சுவா சூ காங் உயர்நிலைப் பள்ளி தமிழ்ப்பாடப் பிரிவின் தலைவர் அந்தோணி ராஜ் ஜோசஃப்.
“செயற்கை நுண்ணறிவு இன்றைய மாணவர்களின் நன்மைக்காகப் பயன்படுத்தப்படுவதை ஆசிரியர்கள் உறுதிசெய்வது அவசியம்,” என்று அவர் வலியுறுத்தினார்.
வெவ்வேறு திறன்கள் கொண்ட மாணவர்களை தற்போது உள்ள வகுப்பறைகளில் அதிகம் காணலாம் என்று தெரிவித்தார் தேசியக் கல்விக்கழகத்தில் முதுநிலைப் பட்டயக் கல்வி பயிலும் திவ்ய தாக்ஷாயணி சிங்காரவேலன்.
“மொழியைப் புகட்டுவது ஒருபுறம் இருக்க, மொழியை எவ்வாறு இந்த மாணவர்களுக்குக் கொண்டுசேர்ப்பது இக்கால தமிழாசிரியர்கள் எதிர்கொள்ளும் மற்றொரு சவால்,” என்றார் அவர்.

