செங்காங் குழுத்தொகுதி மசெக வேட்பாளர் குழு அறிமுகம்

3 mins read
ba2741d1-9b46-4d72-b606-a2ed8c7bb9d1
புதிதாக அறிமுகமான மசெக செங்காங் குழுத்தொகுதி வேட்பாளர் குழு. (இடமிருந்து) டாக்டர் எல்மி நெக்மாட், தியோடோரா லாய், டாக்டர் லாம் பின் மின், பெர்னடெட் கியாம். - படம்: ரவி சிங்காரம்

மக்கள் செயல் கட்சி (மசெக) செங்காங் குழுத்தொகுதிக்கான அதன் வேட்பாளர் குழுவை அறிவித்துள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் செங்காங் அடித்தள ஆலோசகருமான டாக்டர் லாம் பின் மின், 56, நால்வர் கொண்ட அணியை வழிநடத்துவார்.

அவரைத் தவிர மற்ற மூவரும் முதன்முறை வேட்பாளர்களாக நிற்கின்றனர். சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் எல்மி நெக்மாட், 43, தொழில்நுட்பத் தொழில்முனைவர் தியோடோரா லாய், 39, உணவு, பானத் துறை நிபுணர் பெர்னடெட் கியாம், 38, ஆகியோரே அவர்கள்.

சென்ற பொதுத் தேர்தலில் அரசியல் பொறுப்பு வகித்த மூவரை செங்காங் குழுத்தொகுதியில் வேட்பாளர்களாக நிற்கவைத்த மசெக, தன் உத்தியை சற்று மாற்றியுள்ளது.

இம்முறை செங்காங்கின் இளம் தலைமுறையினரையும் பெண்களையும் இன்னும் சிறப்பாகப் பிரதிநிதிக்கும் நோக்கத்தில் இருபாலரும் சரிசமமாக உள்ளடங்கிய இளம் வேட்பாளர் குழுவை முன்வைத்துள்ளதாக டாக்டர் லாம் கூறினார்.

“நாங்கள் எவ்வளவு விரைவில் முடியுமோ - 2020லேயே செங்காங் சென்ட்ரல், செங்காங் நார்த் துணைக் கிளைத் தலைவர்களாக டாக்டர் எல்மி, தியோடோராவை அறிமுகப்படுத்திவிட்டோம். பெர்னடெட் இன்னும் புதியவர் என்றாலும், இவ்வாண்டு தொடக்கத்தில் அவரைச் செங்காங் ஈஸ்ட் கிளைத் தலைவராக அறிமுகப்படுத்தினோம்,” என்றார் டாக்டர் லாம்.

மேலும், பொதுமக்களிடையே நிலவக்கூடிய சில கருத்துகள் பற்றியும் தம் எண்ணத்தைப் பகிர்ந்தார் டாக்டர் லாம்.

“எதிர்க்கட்சிக்கு வாக்களித்தால் நாடாளுமன்றத்தில் ஓர் எதிர்க்கட்சி உறுப்பினர் இருப்பார், அதே சமயம் மசெக உறுப்பினர்களும் அடித்தள ஆலோசகர்களாகவும் கிளைத் தலைவர்களாகவும் உதவுவர், அதனால் கிடைக்கும் உதவி இரட்டிப்பாகும் எனப் பலரும் தவறாகக் கருதுகின்றனர்.

“மசெக ஆட்சியோடு ஒப்பிடும்போது உங்கள் வாழும் சுற்றுச்சூழல் இப்போது இன்னும் நன்றாக உள்ளதா என்பதை நீங்கள் உங்களையே கேட்க வேண்டும். வெவ்வேறு கட்சிப் பிரதிநிதிகள் இணைந்து பணியாற்றும்போது கொள்கை வேற்றுமைகளாலும் ஒருங்கிணைப்பு இன்மையாலும் பலன் குறைகிறது,” என்றார் டாக்டர் லாம்.

வேட்பாளர்களைப் பற்றி

மசெக செங்காங் வெஸ்ட் கிளைத் தலைவரான டாக்டர் லாம் பின் மின், 2017 முதல் 2020 வரை சுகாதார, போக்குவரத்து மூத்த துணை அமைச்சராகவும் 2014 முதல் 2017 வரை சுகாதாரத் துணை அமைச்சராகவும் பணிபுரிந்தார். 

2020ல் செங்காங் குழுத்தொகுதி புதிதாக உருவானபோது அவர் அங்கு வேட்பாளராக நின்றார். ஆனால் அந்தத் தேர்தலில் பாட்டாளிக் கட்சி வென்றதும் அவர் மீண்டும் முழுநேர மருத்துவராகத் தன் பழைய துறைக்கே திரும்பினார். தன் தோல்விக்குப் பின்பும் செங்காங் அடித்தள ஆலோசகராகவும் செங்காங் வெஸ்ட் கிளைத் தலைவராகவும் சேவையாற்றி வருகிறார்.

புதுமுகமான திருவாட்டி பெர்னடெட் கியாம், 38, இரண்டு பிள்ளைகளுக்குத் தாயார். அவர் ‘கிரியேட்டிவ் ஈட்டரிஸ்’ எனும் உள்ளூர் உணவு, பானக் கடையின் இயக்குநராக உள்ளார். சிங்கப்பூர் கேட்டரிங் நிபுணர் சங்கம், சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தின் இளம் வர்த்தகத் தலைவர்கள் அமைப்பு ஆகியவற்றின் செயற்குழு உறுப்பினராகவும் இருக்கிறார். 

“வேலைக்குச் செல்லும் பெற்றோருக்குத் தம் குழந்தைகளின் வளர்ச்சியில் போதிய கவனம் செலுத்தமுடியுமா என்ற அச்சம் உள்ளது. தரமான மழலையர், குழந்தைப் பராமரிப்புத் திட்டங்கள்மூலம் அவர்களுக்கு உதவ விரும்புகிறேன்,” என்றார் திருவாட்டி பெர்னடெட்.

சிங்கப்பூர்த் தேசிய பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் மாணவர்களுக்குத் துணைத் தலைவராகவும் டாக்டர் எல்மி நெக்மா பணியாற்றுகிறார்.

“முதல் வேலை கிடைப்பது, முதல் வீட்டை வாங்குவது, குடும்பத்தைத் தொடங்குவது போன்றவற்றில் இளம் சிங்கப்பூரர்கள் சற்று அச்சம் கொண்டுள்ளனர். இளையர் திறன் மேம்பாட்டுக்கு உதவுவதோடு சமூக ஊடகப் பாதிப்பிலிருந்து அவர்களைத் தற்காக்கவும் விரும்புகிறேன்,” என்றார் டாக்டர் எல்மி.

தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் திருவாட்டி தியோடோரா, இளம் பெண்களின் தலைமைத்துவத் தொடர்பின் நிறுவன உறுப்பினராக உள்ளார். எளிதாக அணுகக்கூடிய வசதிகள், முதியோருக்கு முதலுதவிப் பொருள்கள், பாதுகாப்பான சுற்றுச்சூழல் போன்றவற்றை செங்காங்கிற்குக் கொண்டுவர தாம் விரும்புவதாக அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்