செங்காங் வட்டாரத்தில் 79 வயது மூதாட்டியைக் கொன்றதாக ஆடவர் மீது செவ்வாய்க்கிழமை (ஜூன் 2) குற்றம் சுமத்தப்பட்டது.
திருவாட்டி வாங் ஹாவ் கியூ என்பவரை 44 வயது லிம் யுவென் லீ கொன்றதாகக் கூறப்படுகிறது.
திருவாட்டி வாங் அவரது தாயார் என்று நம்பப்படுகிறது.
ஞாயிற்றுக்கிழமையன்று (ஜூன் 1) அதிகாலை 2 மணிக்கும் காலை 10.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில், புளோக் 465B ஃபேர்ன்வேல் சாலையில் கொலை நடந்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
அதே நாள் நண்பகலுக்கு முன்னதாக உதவி கேட்டு அழைப்பு கிடைத்ததாக காவல்துறை தெரிவித்தது.
லிம்மும் திருவாட்டி வாங்கும் ஒன்றாக வசித்து வந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்தை அதிகாரிகள் அடைந்தபோது திருவாட்டி வாங் வீட்டிற்குள் சுயநினைவின்றி கிடப்பதைக் கண்டனர்.
அவர் சம்பவ இடத்திலேயே மாண்டுவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
மனநலப் பரிசோதனைக்காக லிம்மை சாங்கி சிறை வளாக மருத்துவ நிலையத்தில் விசாரணைக் காவலில் வைக்கும்படி செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நீதிமன்றம் உத்தரவிட்டது.
அவர் ஜூன் 24ஆம் தேதியன்று நீதிமன்றத்தில் மீண்டும் முன்னிலைப்படுத்தப்படுவார்.
மாண்டவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள லிம் நீதிமன்றத்திடம் அனுமதி கேட்டார்.
தமது கைப்பேசியைப் பயன்படுத்தவும் அவர் அனுமதி கோரினார்.
தம்மைப் பிரதிநிதிக்க அரசாங்க வழக்கறிஞரை நியமிக்க விண்ணப்பம் செய்ய விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
லிம்மின் கோரிக்கைகள் குறித்து விசாரணை அதிகாரியிடம் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை விதிக்கப்படலாம்.