மூத்தோர் பராமரிப்பு உருமாற்று முயற்சி: கைகொடுக்கும் சமூகப் பங்காளித்துவம்

2 mins read
95145a2e-6255-4a6a-a687-f68e13d58c75
செயிண்ட் லியூக் மூத்தோர் நிலையத்துக்குச் சொந்தமான துடிப்புடன் மூப்படையும் நிலையத்தில் உடற்பயிற்சி செய்யும் மூதாட்டியை ஊக்குவிக்கும் டாக்டர் கென்னி டான். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 2

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அடுத்த ஆண்டு புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையம் ஒன்று கட்டப்பட இருக்கிறது.

பயிற்சி, வேலை அனுபவத் திட்டம், கற்றல் பயணம் ஆகியவை மூலம் சமூகப் பராமரிப்பு தொடர்பான அனுபவத்தை இப்புதிய நிலையம் மாணவர்களுக்கு வழங்கும்.

நிலையம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களில் தொழில்நுட்பம் வாயிலான அறிவாற்றல் விளையாட்டுகளும் மெய்நிகர் அனுபவங்களும் அடங்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையமும் தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியும் இணைந்து புதிய நிலையத்தை அமைக்கின்றன.

கல்வி நிலைய வளாகத்தில் இத்தகைய மூத்தோர் பராமரிப்பு நிலையம் அமைக்கப்படுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

மூத்தோர் பராமரிப்பு தொடர்பாகத் தாம் கொண்டுள்ள இலக்கை எட்ட பங்காளித்துவத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான் டாக்டர் கென்னி டான்.

மகப்பேறு மருத்துவராக இருந்த 51 வயது டாக்டர் டான், கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்பு மூத்தோர் பராமரிப்புத்துறைக்கு மாறினார்.

மூத்தோர் பராமரிப்பில் ஒட்டுமொத்த சமூகமும் ஈடுபட வேண்டும் என்றும் பங்காளித்துவம் அதிகம் கைகொடுக்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.

செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2016ஆம் ஆண்டில் பொறுப்பேற்றதிலிருந்து புதிய பங்காளித்துவங்களை அவர் ஏற்படுத்தியுள்ளார்.

இதன்மூலம் மூத்தோருக்குத் தடையற்ற பராமரிப்பு கிடைப்பதாகவும் ஒரே கூரையின்கீழ் பல சேவைகளை அவர்களால் பெற முடிகிறது என்றும் டாக்டர் டான் தெரிவித்தார்.

கடந்த பத்தாண்டுகளில் செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

மூத்தோர் பராமரிப்பு நிலையங்கள், பகல்நேர மறுவாழ்வு நிலையங்கள், துடிப்புடன் மூப்படையும் நிலையங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை 12லிருந்து 30ஆக ஏற்றம் கண்டுள்ளது.

இரண்டு தாதிமை இல்லங்களையும் அது தற்போது இயக்கி வருகிறது.

செயிண்ட் லியூக் மூத்தோர் பராமரிப்பு நிலையம் மூலம் பலனடையும் மூத்தோரின் எண்ணிக்கை 1999ஆம் ஆண்டில் 220ஆக இருந்தது. அந்த எண்ணிக்கை இவ்வாண்டு 22,000ஆக உயர்ந்துள்ளது.

2030ஆம் ஆண்டுக்குள் 45,000ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேம்படுத்தப்பட்ட சமூகப் பராமரிப்பில் டாக்டர் டானின் பணியை அடையாளம் கண்டு செப்டம்பர் 24ஆம் தேதியன்று அவருக்கு பிளாட்டினம் தலைமைத்துவ விருது வழங்கப்படும். டாக்டர் டான், இந்த விருதைப் பெறும் முதல் சிங்கப்பூரர் ஆவார்.

சமூகப் பராமரிப்பு மனிதவள மேம்பாடு மற்றும் உன்னத விருதுகள் விழாவில் இவ்விருது வழங்கப்படும். இந்த விருதளிப்பு விழாவுக்கு ஒருங்கிணைக்கப்பட்ட பராமரிப்பு அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரியில் அமைக்கப்படும் புதிய மூத்தோர் பராமரிப்பு நிலையத்தில் மூத்தோருக்கான பகல் நேரப் பராமரிப்பும் மறுவாழ்வுச் சேவைகளும் வழங்கப்படும்.

அங்கு நாள்தோறும் 80க்கும் மேற்பட்ட மூத்தோருக்கு சேவை வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்