மூத்த அமைச்சர் லீ: மகிழ்ச்சி தரும் குடியிருப்பாக அங் மோ கியோ திகழும்

2 mins read
1de179ae-3cc0-4624-b916-6005601514bd
அங் மோ கியோ நகர மன்றத்தின் பெருந்திட்ட அறிமுக விழாவில் கலந்துகொண்டு குடியிருப்பாளர்களுடன் பேசிய மூத்த அமைச்சர் லீ சியன் லூங் (நடுவில்). - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

கடந்த ஐந்து ஆண்டுகளில் அங் மோ கியோ வட்டாரம் பல மேம்பாடுகளைக் கண்டுள்ளது. அங்குள்ள சந்தைகளும் உணவு நிலையங்களும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், குடியிருப்புப் பேட்டையை மூத்தோருக்கு ஏற்புடையதான, அவர்கள் பாதுகாப்பாக இருக்க தேவையான அம்சங்களுடன் தெருக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அடுத்த ஐந்து ஆண்டுகளிலும், குடியிருப்பாளர்களின் தொடர் ஆதரவு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் தலைமைத்துவம் ஆகியவற்றுடன் மேலும் பல மேம்பாட்டுத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் சனிக்கிழமை (மார்ச் 15) தெரிவித்தார்.

அங் மோ கியோ நகர மன்றத்தின் பெருந்திட்ட அறிமுக விழாவில் திரு லீ கலந்துகொண்டு பேசினார். இளையர், மூத்தோர் நலனில் திட்டம் தொடர்ந்து கவனம் செலுத்தும் என்றார் திரு லீ.

அதுமட்டுமல்லாது, அங் மோ கியோ வட்டாரத்தின் ஏழு பிரிவுகளிலும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை, நீடித்த நிலைத்தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று மூத்த அமைச்சர் லீ தெரிவித்தார்.

அங் மோ கியோ-ஹவ்காங், செங் சான்-சிலேத்தார், ஃபெர்ன்வேல், ஜாலான் காயு, டெக் கீ, கெபுன் பாரு, இயோ சூ காங் ஆகியவை அங் மோ கியோ வட்டாரத்தைச் சேர்ந்த ஏழு பிரிவுகளாகும்.

செங் சான்-சிலேத்தார், இயோ சூ காங் ஆகிய இடங்களில் உள்ள சமூக மன்றங்கள் மேம்படுத்தப்படுகின்றன. இரு சமூக மன்றங்களிலும் புதுப்பிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

புதிய விளையாட்டு மைதானங்கள், சமூக இடங்கள் ஆகியவற்றால் லென்டோர் எஸ்டேட் மற்றும் கெக்டஸ் சன்ரைஸ் குடியிருப்பாளர்கள் பலனடைவர். அங் கோ கியோ வட்டாரத்தில் மேலும் பல இடங்களில் கூரையுள்ள நடைபாதைகள் அமைத்துத் தரப்படுகின்றன.

மூத்தோருக்கு ஏற்புடைய வசதிகள், திட்டங்கள் ஆகியவை அறிமுகப்படுத்தப்படும் என்ற திரு லீ, மூத்தோர் மேம்பாட்டுத் திட்டத்தை கோடிகாட்டினார்.

சொங் பூன் வட்டாரத்தில் உள்ள நான்கு குடியிருப்புப் பகுதிகளில் அது நடைமுறைப்படுத்தப்படும் என்றார் அவர். தோட்டங்கள், உடற்பயிற்சிக்கான இடங்கள், இடையூறு இல்லாத பாதைகள் போன்ற துடிப்புடன் மூப்படைய தேவையான அம்சங்கள் கட்டப்படும் என்று திரு லீ கூறினார்.

பூங்காக்களுக்குப் புத்துணர்ச்சியூட்டப்படும் என்று குறிப்பிட்ட திரு லீ, மிதிவண்டிக்கான பாதைகளும் விரிவுபடுத்தப்படும் என்று தெரிவித்தார்.

“வாழ்வதற்கு மிகவும் ஏற்புடைய இடமாக அங் மோ கியோ திகழும். குடியிருப்பாளர்கள் மகிழ்ச்சியுடன் வாழும் குடியிருப்புப் பகுதியாக அது இருக்கும். இந்த இலக்கை எட்ட, தரமான திட்டங்களை வகுத்துள்ளோம்.

“அங் மோ கியோவை மேம்படுத்த குடியிருப்பாளர்கள் எங்களுடன் இணைந்து செயல்பட வேண்டும்,” என்று அங் மோ கியோ சென்ட்ரல் ஸ்டேஜில் நடைபெற்ற பெருந்திட்ட அறிமுக நிகழ்ச்சியில் திரு லீ கூறினார்.

குறிப்புச் சொற்கள்