புதிய குடிமக்கள், சிங்கப்பூரர்கள் ஒன்றுபட்டு வாழ மூத்த அமைச்சர் லீ அழைப்பு

3 mins read
c5599e1a-037a-4979-865a-60a6ee0bf32b
ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9) கிட்டத்தட்ட 200 புதிய குடிமக்களுக்குச் சான்றிதழ்களை வழங்கிய மூத்த அமைச்சர் லீ சியன் லூங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரர்கள் புதிதாக குடியுரிமை பெறுவோருடன் ஒன்றிப் பழகி, அவர்களை அரவணைத்துச் சென்று சிங்கப்பூரர்கள், புதிய குடிமக்கள் என அனைவரும் வாழ மூத்த அமைச்சர் லீ சியன் லூங் அழைப்பு விடுத்துள்ளார்.

நன்யாங் பலதுறைத் தொழிற்கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 9ஆம் தேதி) நடைபெற்ற புதுக் குடிமக்களுக்கு குடியுரிமைச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வில் பேசிய மூத்த அமைச்சர் லீ மேற்கண்டவாறு அறைகூவல் விடுத்தார்.

“புதிய குடிமக்கள் குடியுரிமை பெற்று, அவர்களை இந்த நாட்டில் காலூன்ற வைத்து, அவர்களுக்கு இது தங்கள் நாடு என்ற உணர்வை ஏற்படுத்தி, இங்கு சமுதாயம் செயல்படும் விதம் குறித்து அவர்களுக்கு புரிய வைத்து, அனைவரும் இங்கு ஒன்றுபட்டு வாழ வைப்பது என்பது வெறும் நிர்வாகம் தொடர்பான நடைமுறை மட்டும் அல்ல. அது ஆழமான ஒரு தனிப்பட்ட பயணம்,” என்றார் திரு லீ.

“ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 22,000 பேருக்கு குடியுரிமை வழங்குகிறோம். நம்பிக்கை வைத்து சிங்கப்பூரைத் தங்கள் நாடாக ஏற்றுக்கொள்ளும் அனைவரிடமும் ஒரு தனித்துவமான பின்னணி உண்டு,” என்றார் மூத்த அமைச்சர் லீ.

அவர்கள் குடியுரிமை பெறுவதில் ஓர் அர்த்தம் உள்ளது. அதேவேளை, சிங்கப்பூர் அவர்களை வரவேற்பதிலும் அர்த்தம் உள்ளது என்று அவர் விளக்கினார்.

குடிநுழைவு அனுமதி இந்நாட்டுக்கு அத்தியாவசியமானது. சிங்கப்பூர் எவ்வித இயற்கை வளமும் இல்லாத சின்னஞ் சிறிய நாடு. மற்ற நாடுகளைப் போல் அல்லாமல் சிங்கப்பூர் தனது மக்கள், அவர்களின் திறன், முனைப்பு, கடும் உழைப்பு இவற்றை நம்பியே இந்நாட்டின் வாழ்வாதாரம் உள்ளது.

சிங்கப்பூர் ஊழியரணி மூப்படைந்து வருகிறது, பிறக்கும் குழந்தைகள் போதுமானதாக இல்லை என்பதுடன் பொருளியல் வளர்ச்சி பெற புதிய குடிமக்கள் நாட்டுக்குத் தேவை என்று திரு லீ குறிப்பிட்டார்.

ஆயினும், இது வெறும் எண்ணிக்கைக் கணக்கு மட்டுமில்லை. புதிதாக வருவோர் இந்தச் சமுதாயம் வளம் பெறும் விதமாக புதியனவற்றைக் கொண்டு வருவதுடன் கணக்கில் வராத வகையில் நமது பொருளியலுக்குப் புத்துயிர் ஊட்டுகின்றனர் என்று மூத்த அமைச்சர் லீ தெரிவித்தார்.

புதுக் குடிமக்கள், புதுப் புது அனுபவங்களுடன், உலகளாவிய தொடர்புகள், பல்வேறு கண்ணோட்டங்களுடன் வரும்போது சிங்கப்பூர், மற்ற உலக நாடுகளுடன் இணைந்த இந்த வட்டாரத்தில் துடிப்புமிக்க நாடாக உருவெடுக்கிறது. இப்படித்தான் லண்டன், நியூயார்க், ஷாங்காய் போன்ற நகரங்கள் உலகின் கலாசார மையங்களாகவும் செழிப்பாகவும் திகழ்கின்றன என்று அவர் கூறினார்.

எல்லா நாட்டிலும் குடிநுழைவு என்பது ஒரு உணர்வுபூர்வமான பிரச்சினை. அந்தந்த நாட்டில் வாழ்வோர், புதிதாக வருவோரிடையே எப்பொழுதும் சற்று பதற்றமான சூழல் நிலவும். இதை சிங்கப்பூர் நன்கு உணர்ந்துள்ளது, அதிலும் இங்கு வருவோர் எண்ணிக்கை கணிசமானது என்பதால் என்றார் அவர்.

“ஆகையால், குடியேறிகளின் வரவை நாம் கவனமாகக் கையாள்வது முக்கியம். அதனை அளவோடும் சமநிலையோடும் வைத்திருக்க வேண்டும். வெவ்வேறு இனக்குழுக்களுக்கு இடையிலான, புதிய குடியேறிகளுக்கும் இங்கு வாழ்வோருக்கும் இடையிலான உறவுமுறைகளையும் நல்லிணக்கத்தையும் அணுக்கமாகக் கண்காணிக்க வேண்டும். நம் சமூகத்துடன் பொருந்தக்கூடியவர்களை, இணைந்து செயல்படக்கூடியவர்களை ஏற்றுக்கொள்ள வேண்டும்,” என்று அவர் வலியுறுத்தினார்.

புதிய குடிமக்களும் சிங்கப்பூர் சமுதாயத்தில் முழு மனத்துடன் பங்குபெற்று ஒன்றிணைவர் என்று மூத்த அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாளடைவில், முந்தைய தலைமுறையினர்போல் இங்கு அவர்களின் பிள்ளைகளும் தேசிய சேவையில் ஈடுபடும்போது வேறுபாடுகள் குறையும்.

இதில் மற்ற குடிமக்களும் தங்கள் பங்கை ஆற்றுவதுடன் புதியவர்களை வரவேற்று அவர்களுடன் கலந்துறவாட திரு லீ அறைகூவல் விடுத்தார்.

குறிப்புச் சொற்கள்