அங் மோ கியோ குழுத்தொகுதியின் அளவைக் குறைக்கவே, புதிய ஜாலான் காயு தனித்தொகுதியை அமைக்க தேர்தல் தொகுதி மறுஆய்வுக் குழு பரிந்துரைத்துள்ளதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை (மார்ச் 12) அவர் வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில், காலவோட்டத்தில் அங் மோ கியோவின் மக்கள்தொகை அதிகரித்துள்ளதாகச் சொன்னார். வேறெந்த தொகுதியைவிட அங் மோ கியோவில் கூடுதல் வாக்காளர்கள் இடம்பெற்றனர். இதனால், வெவ்வேறு தனித்தொகுதிகளை அமைக்க, அங் மோ கியோ குழுத்தொகுதியின் அளவு குறைக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டினார். இது இயல்பான நடைமுறையே என்றார் அவர்.
இன்று, இயோ சூ காங் தனித்தொகுதியும் கெபுன் பாரு தனித்தொகுதியும் அங் மோ கியோ குடும்பத்தின் ஓர் அங்கமாக விளங்குகின்றன.
“குடியிருப்பாளர்களுக்கு பலதரப்பட்ட நடவடிக்கைகளையும் ஆற்றல்மிகுந்த கூடுதல் சேவைகளையும் வழங்க அங் மோ கியோ நகர மன்றத்தில் நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுகிறோம்.
“எதிர்வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, ஜாலான் காயு தனித்தொகுதியைச் சேர்ந்த குடியிருப்பாளர்களை அதேபோல கவனித்துக்கொள்ள நான் எதிர்பார்க்கிறேன்,” என்றார் திரு லீ.