நேப்பாளப் பேரிடர் தொடர்பில் இந்தியர்களுக்கு எதிராக சமூக ஊடகங்களில் பதிவிடப்படும் இனவாதக் கருத்துகள், வெறுப்புப் பேச்சுகள் பற்றி கருத்துரைத்துள்ள பிரதமர் லாரன்ஸ் வோங், இனம், மத ரீதியாக நம்மைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை நாம் தொடர்ந்து நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
ஒருவரையொருவர் சக சிங்கப்பூரர்களாக அங்கீகரிக்கப்பட்டால் சிங்கப்பூர் இன்று ஒன்றாக இணைந்து நிற்கிறது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 6) வெளியிட்ட தமது ஃபேஸ்புக் பதிவில், “இனம், மொழி, மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் நமது உறுதிமொழியில் உள்ள லட்சியங்களை உறுதியாகப் பற்றிக்கொள்ள வேண்டும். சிங்கப்பூரில் எந்தவொரு சமூகத்திற்கு எதிரான பாகுபாடும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவோ இயல்பானதாகவோ மாறுவதை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது,” என்றார் அவர்.
தேசிய தினப் பேரணியில், ஒரு சிங்கப்பூரராக இருப்பதன் பொருள், எப்படிப்பட்ட சிங்கப்பூராக இருக்க விரும்புகிறோம் என்பது பற்றி தாம் பேசியதையும் அவர் நினைவுகூர்ந்தார்.
“நமது அடையாளம் எப்போதும் திறந்த மனத்துடன் அனைவரையும் உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும். நமது பின்னணி எதுவாக இருந்தாலும், நமது மதிப்புகளையும் வாழ்க்கை முறையையும் நாம் ஏற்றுக்கொள்ளும்போது, நாம் இந்த இந்நாட்டின் ஓர் அங்கமாகிறோம். நமது தேசிய உறுதிமொழி உணர்த்துவதும் இதைத்தான், பெரும்பான்மையான சிங்கப்பூரர்கள் இதே கருத்தைப் பகிர்ந்து கொள்கிறார்கள்,” என்று அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
நேப்பாளத்தில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பிறகு காணாமல் போன சிங்கப்பூரர்களைப் பற்றி துரதிர்ஷ்டவசமாக இணையத்தில் இனவெறிக் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. அண்மையில் ஏர் இந்தியாவில் எஸ்ஐஏ செய்துள்ள முதலீடு குறித்தும் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்புரைகளும் பரப்பப்பட்டுள்ளன.
“நாம் ஆரோக்கியமான விவாதங்களை நடத்த முடியும், நடத்தவும் வேண்டும். ஆனால், எந்தவொரு சமூகத்திற்கும் எதிரான பாகுபாட்டையோ, வெளிநாட்டவர்கள் மீதான வெறுப்பையோ தூண்ட, நியாயமானதுபோல்தோன்றும் வாதங்களை ஒரு போர்வையாக நாம் ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது,” என்று அவர் குறிப்பிட்டார்.
“இந்தக் கருத்துகள் சிங்கப்பூரைப் பிரதிபலிக்கவில்லை. ஆனால், இவற்றை ஆபத்தில்லாத சாதாரண இணையப் பேச்சு என்று நாம் ஒதுக்கிவிடவும் முடியாது. இதுபோன்ற நடத்தைகளைக் கண்டிக்காமல் விட்டால், அது இயல்பான ஒன்றாக மாறி, சமூகங்களுக்கு இடையிலான நம்பிக்கையைக் குலைத்து நம்மைப் பிளவுபடுத்திவிடும்.
“இந்த மாற்றங்கள் குறித்து எனது அமைச்சரவை சகாக்களுடன் நான் விவாதித்தேன். இதனால்தான் மூத்த அமைச்சர் சண்முகம் வார இறுதியில் இது குறித்து உறுதியாகக் குரல் கொடுத்தார்.
இதற்கிடையே, நேப்பாள வெள்ளப் பெருக்குச் சம்பவத்தின் தொடர்பில் இந்தியச் சமூகத்தைக் குறிவைத்துத் தெரிவிக்கப்படும் இனவாதக் கருத்துகளும் வெறுப்புணர்வு விமர்சனங்களும் தன்னை மிகுந்த கவலையில் ஆழ்த்தியிருப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் கூறியுள்ளார்.
அத்தகைய வெறுப்புகளை நிராகரிக்க வேண்டும் என்று அவர் சிங்கப்பூரர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இதுபோன்ற துயரமான (நேப்பாள வெள்ளம்) காலங்களில் இரக்கமும் ஒற்றுமையுமே நமது பதிலாக இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இனம், மொழி அல்லது மதம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் சிங்கப்பூரர்கள் ஒருவருக்கொருவர் உறுதுணையாக நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சிங்கப்பூர் எப்போதும் இனவாத, பகைமை உணர்வுகளைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்தும் போக்குகளால் பாதிக்கப்படக்கூடிய நிலையிலேயே இருக்கும் என்று அவர் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
“இனங்களுக்கிடையிலான சகிப்புத்தன்மை, பரஸ்பர மரியாதைக்காக நாடு பாடுபட்டு வந்தாலும் மனிதர்கள் இன வேறுபாட்டை உணராதவர்கள் அல்லர், இனமும் மதமும் சமூகத்தில் எப்போதும் ஒரு பிளவுப் புள்ளியாகவே இருக்கும்,” என்றார் அவர்.
“இதனால் சிங்கப்பூர் தனது சமூக ஒற்றுமையை வலுப்படுத்தவும் இன நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவும் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும்,” என்றார் திரு லீ.
“இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது தலைவர்கள் தீர்க்கமாகவும் உறுதியாகவும் குரல் கொடுக்க வேண்டும், என்ன நடக்கிறது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். தாழ்வான உணர்வுகளைப் பயன்படுத்துவதைக் கண்டிக்க வேண்டும். இதற்கு எதிராக அனைத்து சிங்கப்பூரர்களும் ஒன்றாக நிற்க வேண்டும்,” என்று அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இந்தப் பிரச்சினையை தெளிவுபடுத்தும் வகையில் மூத்த அமைச்சர் கா. சண்முகம் செப்டம்பர் 5ஆம் தேதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.
நேப்பாள வெள்ளப்பெருக்கு, ஏர் இந்தியா நிறுவனத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்சின் முதலீடு உள்ளிட்டவை தொடர்பான இனவெறி, வெளிநாட்டவர் மீதான வெறுப்புணர்வு குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக அப்போது தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அமைச்சருமான திரு சண்முகம் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இந்தப் பிரச்சினைகள் குறித்து இணையத்தில் பதிவிடப்பட்ட பாம்பு, கறி, புரோட்டா, மந்திரவாதம் மற்றும் பிற இனவெறி சார்ந்த கருத்துகள் வெட்கப்படக்கூடியவை, மோசமானவை, ஏற்கமுடியாதவை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதுபோன்ற செயல்கள் இயல்பான ஒன்றாக மாறிவிடக் கூடாது என்பதற்காகவே, இத்தகைய கருத்துகளைத் தெரிவிப்பவர்களைச் சுட்டிக்காட்ட முடிவு செய்ததாகவும் அவ்வாறு இயல்பாக மாறினால், அது பொது விவாதங்களின் தரத்தைக் குறைத்து, சமூக நல்லிணக்கத்தைப் பாதிக்கும் என்றும் இத்தகைய கருத்துகள் வழிகாட்டுதல்களை மீறுவதால் அவற்றை அகற்றுமாறு தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சிடம் கேட்டுக் கொள்ளப்படும் என்றும் அவர் சொன்னார்.


