இந்தியாவின் முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான டாக்டர் மன்மோகன் சிங், உடல்நலக் குறைவால் வியாழக்கிழமை (டிசம்பர் 26) இரவு காலமானார். அவருக்கு வயது 92.
டாக்டர் சிங்கின் மறைவு தம்மை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் டிசம்பர் 28ஆம் தேதியன்று தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.
டாக்டர் சிங்கின் குடும்பத்தாருக்கும் இந்தியக் குடிமக்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களை அவர் தெரிவித்துக்கொண்டார்.
டாக்டர் சிங்கும் தாமும் பிரதமராவதற்கு முன்பே நிதி அமைச்சராக இருந்தபோது தங்களுக்கிடையே அறிமுகம் ஏற்பட்டதாகத் திரு லீ பகிர்ந்துகொண்டார்.
பொருளியல் அடிப்படையில் வலிமைமிக்க நாடாக இந்தியா உருமாற பொருளியல் நிபுணரான டாக்டர் சிங் முக்கிய பங்கு வகித்தார் என்று திரு லீ புகழாரம் சூட்டினார்.
அவர் நிதி அமைச்சராகப் பதவி வகித்தபோது இந்தியப் பொருளியலைத் தாராளமயமாக்கி மற்ற நாடுகள் வர்த்தகம் செய்ய அதைத் திறந்துவிட்டதாக மூத்த அமைச்சர் லீ குறிப்பிட்டார்.
அதையடுத்து, 2004ஆம் ஆண்டில் டாக்டர் சிங் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்ற பிறகு, கூடுதல் சீர்திருத்தங்களைத் தொடர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
இதன் காரணமாக முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியப் பொருளியல் பேரளவில் வளர்ச்சி கண்டதாகவும் இந்தியர்கள் பலர் வறுமையின் பிடியிலிருந்து தப்பியதாகவும் திரு லீ கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையே நீண்டகால நல்லுறவு இருந்து வருவதாகக் குறிப்பிட்ட திரு லீ, சிங்கப்பூரின் பிரதமராகத் தாம் இருந்தபோது இருநாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தவும் ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும் டாக்டர் சிங்குடன் இணைந்து செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இருவரும் இணைந்து முழுமையான பொருளியல் ஒத்துழைப்பு ஒப்பந்தத்தைப் பூர்த்தி செய்ததாகத் திரு லீ கூறினார்.
இந்த ஒப்பந்தம் சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வலுவான பொருளியல் பங்காளித்துவத்தைப் பலப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.
டாக்டர் சிங், 2011ஆம் ஆண்டில் சிங்கப்பூருக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டதைத் திரு லீ நினைவுகூர்ந்தார்.
டாக்டர் சிங் தொடர்ச்சியாக ஆசியான் உச்சநிலை மாநாடுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்ததைத் திரு லீ சுட்டினார்.
இந்தியாவின் பங்காளித்துவம் ஆசியான் நாடுகளின் அமைதிக்கும் செழுமைக்கும் முக்கியம் என டாக்டர் சிங் கருதியதாக அவர் கூறினார்.
டாக்டர் சிங் கணிவுடன் பழகியவர் என்றும் சிங்கப்பூருடன் அவர் கொண்ட நட்புறவு என்றென்றும் தமது நினைவில் இருக்கும் என்றார் திரு லீ.
தன்னடக்கத்துடனும் நேர்மையுடனும் அவர் தமது நாட்டுக்குச் சேவையாற்றியதாக மூத்த அமைச்சர் லீ பாராட்டினார்.
இதற்கிடையே, டாக்டர் சிங்கின் மறைவுக்குப் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
டாக்டர் சிங் தமது தொலைநோக்குப் பார்வை மற்றும் முனைப்பின் மூலம் இந்தியாவின் பொருளியலை மறுவடிவமைத்ததாக திரு வோங் கூறினார்.
இதன் காரணமாக இந்தியா அசுர வளர்ச்சி அடைந்து உலகளாவிய நிலையில் வலுவான, முக்கிய நாடாகத் திகழ்கிறது என்றார் அவர்.
டாக்டர் சிங்கின் தலைமையின்கீழ் சிங்கப்பூர்-இந்தியா உறவு பேரளவில் வலுவடைந்ததைப் பிரதமர் வோங் சுட்டினார்.

