மூத்த அமைச்சர் லீ: வெற்றியைத் தந்த பாதையிலேயே செல்லுங்கள்

1 mins read
63599352-b70a-45bf-8701-555714009299
காலனித்துவம், கம்யூனிசக் கோட்பாடு, வகுப்புவாதம் ஆகியவற்றை எதிர்த்து மிகக் கடுமையாகப் போராடி தற்போதைய நிலையை சிங்கப்பூர் அடைந்திருப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்தார். - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

சிங்கப்பூர் தொடர்ந்து செழித்தோங்க, வெற்றியைத் தந்த பாதையிலேயே தொடர்ந்து செல்வதுதான் நல்ல முடிவாகும் என்று மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

அறிமுகமில்லாப் பாதையில் செல்லும்போது பாதகமான நிலை ஏற்பட்டால் அதைச் சமாளிக்க ‘காப்புறுதித் திட்டம்’ வாங்குவதற்குப் பதிலாக ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள, நல்ல முடிவுகளைத் தரும் பாதையில் தொடர்ந்து செல்வதே சிறப்பு என்று அவர் வலியுறுத்தினார்.

காலனித்துவம், கம்யூனிசக் கோட்பாடு, வகுப்புவாதம் ஆகியவற்றை எதிர்த்து மிகக் கடுமையாகப் போராடி தற்போதைய நிலையை சிங்கப்பூர் அடைந்திருப்பதாக அவர் தெரிவித்தார்.

இந்த அனுபவமே நாட்டின் முதல் தலைமுறை தலைவர்களையும் குடிமக்களையும் வடிவமைத்தது என்றும் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கடுமையாக உழைத்து சிங்கப்பூரை வெற்றியின் பாதைக்குக் கொண்டு சென்றனர் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் உள்ள ஹார்வர்ட் கென்னடி பள்ளியில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆட்சிமுறை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.

மூத்த அமைச்சர் லீ அமெரிக்காவுக்கு அதிகாரபூர்வப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இருபது நிமிட உரையில், ஆட்சிமுறை பற்றி தமது அனுபவரீதியான கருத்துகள், சிங்கப்பூரின் வரலாறு போன்றவை குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்