மூத்த அமைச்சர் லீ சியென் லூங்கிற்கு ஆஸ்திரேலியாவின் உயரிய விருது

2 mins read
e7f20302-b19f-4348-a72e-47211cd72ade
(வலது) மூத்த அமைச்சர் லீ சியென் லூங்கிற்கு ஆஸ்திரேலியாவின் ஆக உயரிய ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா விருது வழங்கப்பட்டது. - படம்: தகவல், மின்னிலக்க மேம்பாட்டு அமைச்சு

மூத்த அமைச்சர் லீ சியென் லூங் ஆஸ்திரேலியாவின் ஆக உயரிய குடிமகன் விருதான ‘ஆர்டர் ஆஃப் ஆஸ்திரேலியா’ பதக்கத்தைப் பெற்றுள்ளார்.

சிங்கப்பூருடனான ஆஸ்திரேலியாவின் இருதரப்பு உறவு வளர பெரும்பங்களித்ததற்காக திரு லீக்கு அந்தப் பதக்கம் வழங்கப்பட்டது.

சிங்கப்பூருக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்ட ஆஸ்திரேலியத் தலைமை ஆளுநர் சேம் மொஸ்டின் செவ்வாய்கிழமை (ஆகஸ்ட் 5) நடைபெற்ற சடங்குபூர்வ நிகழ்ச்சியில் அந்த உயரிய பதக்கத்தைத் திரு லீக்கு வழங்கினார்.

தமது 40 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், குறிப்பாக 2004ஆம் ஆண்டிலிருந்து 2024ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரின் பிரதமராகப் பொறுப்பு வகித்த திரு லீ, ஆஸ்திரேலியா-சிங்கப்பூர் உறவு அடுத்த கட்டங்களுக்கு முன்னேற குறிப்பிடத்தக்க வகையில் பங்காற்றியுள்ளார் என்று ஆஸ்திரேலியாவின் பிரதமர் அலுவலகம் குறிப்பிட்டது.

“திரு லீ இரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவை வலுப்படுத்த உதவினார். இருதரப்புக்கும் பயனளிக்கும் வகையிலான உடன்பாடுகளையும் எட்ட திரு லீ தொடர்ந்து முயற்சி செய்தார்,” என்று ஆஸ்திரேலியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

பிரதமராகத் திரு லீ இருந்த காலக்கட்டத்திலும் ஆஸ்திரேலியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான பொருளியல் உறவு பன்மடங்கு வளர்ந்ததாகச் சொன்ன அலுவலகம், தென்கிழக்காசியாவில் ஆஸ்திரேலியாவின் ஆகப் பெரிய வர்த்தகப் பங்காளியாகவும் முதலீட்டாளராகவும் சிங்கப்பூர் இருப்பதைச் சுட்டியது.

சிங்கப்பூர்- ஆஸ்திரேலிய தடையற்ற வர்த்தக உடன்பாடு ஆறு முறை மறுஆய்வு செய்யப்பட்டதை எவ்வாறு திரு லீ மேற்பார்வையிட்டு வழிநடத்தினார் என்பதையும் அலுவலகம் குறிப்பிட்டது.

சிங்கப்பூரின் ஆஸ்திரேலியத் தூதரின் இல்லத்தில் இடம்பெற்ற சடங்குபூர்வ நிகழ்ச்சியில் திரு லீயும் அவரது துணைவியும் கலந்துகொண்டனர். அவருடன் பிரதமர் அலுவலக அமைச்சர் இந்திராணி ராஜா, வெளியுறவு மூத்த துணையமைச்சர் சிம் ஆன், வடமேற்கு வட்டார மேயரும் சிங்கப்பூர்- ஆஸ்திரேலிய நாடாளுமன்ற நட்புக் குழுவின் தலைவருமான திரு அலெக்ஸ் யாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ஆஸ்திரேலியாவின் உயரிய விருதைப் பெற்றதில் பெருமிதம்கொள்வதாக உரையாற்றிய திரு லீ, ஆஸ்திரேலிய அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

“கடந்த 60 ஆண்டுகளாக இருநாட்டு உறவை வலுப்படுத்த உதவிய பல தலைமுறை சிங்கப்பூரர்கள், ஆஸ்திரேலியர்களின் சார்பில் நன்றி கூறுகின்றேன்,” என்றார் திரு லீ.

குறிப்புச் சொற்கள்