சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும் முன்னாள் பிரதமருமான லீ சியன் லூங், திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை (மே 4 முதல் மே 8) வரை மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார்.
பாகாங் மாநில மன்னர் அப்துல்லா அகமது ஷா, அரசியார் துங்கு அஸிஸா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆகியோரின் அழைப்பை ஏற்று மூத்த அமைச்சர் லீ பாகாங்கிற்குச் செல்கிறார்.
மூத்த அமைச்சர் லீ திரெங்கானுவிற்கும் பயணம் மேற்கொள்வார். இருதரப்புப் பரிமாற்றங்களின் வலுவான உத்வேகத்தின் அடிப்படையில் அமைந்துள்ள மூத்த அமைச்சர் லீயின் இந்தப் பயணம், மலேசிய மாநிலங்கள் மற்றும் அவற்றின் தலைவர்களுடனான சிங்கப்பூரின் நீண்டகால, பன்முக உறவுகளை மேலும் ஆழமாக்கும்.
பாகாங்கில், மூத்த அமைச்சர் லீ அம்மாநில மன்னரைச் சந்தித்துப் பேசுவார். அத்துடன், மன்னர் அளிக்கும் மதிய விருந்திலும் அவர் கலந்துகொள்வார். பாகாங்முதல்வர்வான் ரோஸ்டி வான் இஸ்மாலையும்மாநிலத்தின் மற்ற தலைவர்களையும் அவர் சந்திப்பார்.
திரெங்கானுவில், மாநில முதல்வர் டாக்டர் அஹ்மத் சம்சுரி மொக்தாரையும் மாநிலத் தலைவர்களையும் மூத்த அமைச்சர் லீ சந்தித்துப் பேசுவார்.
இந்தப் பயணத்தில் மூத்த அமைச்சர் லீயுடன் அவரது துணைவியார் ஹோ சிங், சட்ட அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான எட்வின் டோங், வெளியுறவு, சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணையமைச்சர் ஸுல்கர்னைன் அப்துல் ரஹிம், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரேரா, வெளியுறவு அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் செல்கின்றனர்.

