மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சுக்கு பணி நிமித்தப் பயணமாகச் சென்றுள்ளார்.
“தற்போது பியூனஸ் அயர்சுக்கு பணி நிமித்தப் பயணமாகச் சென்றுள்ள மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அர்ஜென்டினா-சிங்கப்பூர் நாடாளுமன்ற நட்புறவுக் குழுவின் தலைவரும், கோர்டோபா மாகாணத்திற்கான தேசிய துணைத் தலைவருமான திருவாட்டி பெலன் அவிகோ மற்றும் பியூனஸ் அயர்ஸ் நகரத்திற்கான தேசிய துணைத் தலைவரும், பிரதிநிதிகள் சபையில் மெர்கோசர் ஆணையத்தின் தலைவருமான திரு எட்வர்டோ வால்டெஸ் ஆகியோரை அக்டோபர் 20ஆம் தேதி அர்ஜென்டினாவின் தேசிய நாடாளுமன்றத்தில் சந்தித்தார்.
இந்தக் கூட்டத்தில், சால்டா மாகாணத்திற்கான தேசிய துணைத் தலைவர் திருவாட்டி யோலண்டா வேகா, சாண்டா ஃபே மாகாணத்திற்கான தேசிய துணைத் தலைவர் திரு எஸ்டெபன் பவுலோன், பிரதிநிதிகள் சபையில் நாடாளுமன்ற அரசதந்திரம் மற்றும் அனைத்துலக ஒத்துழைப்புப் பிரிவின் இயக்குநர் திருவாட்டி லூசியானா டெர்மின், அர்ஜென்டினா வெளியுறவு, அனைத்துலக வர்த்தகம் மற்றும் வழிபாட்டு அமைச்சின் ஆசியா ஓசியானியா இயக்குநர் திரு லூயிஸ் டெல் சோலார் டோரெகோ ஆகியோர் கலந்து கொண்டனர்.
2024ஆம் ஆண்டில் 50 ஆண்டுகால அரசதந்திர உறவின் நிறைவைக் கொண்டாடிய சிங்கப்பூருக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையிலான நட்பார்ந்த உறவை மூத்த அமைச்சர் லீ மற்றும் அர்ஜென்டின நாடாளுமன்ற உறுப்பினர்கள் அச்சந்திப்பின்போது வரவேற்றனர்.
இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள், எரிசக்தி, மின்னிலக்கப் பொருளியல் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் மற்றும் சிங்கப்பூர், அர்ஜென்டினா நாடுகளுக்கு இடையே உள்ள நாடாளுமன்றத் தொடர்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் விவாதித்தனர்.
மெர்கோசூர்-சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், அர்ஜென்டின நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன், அதை விரைவாக அங்கீகரிப்பதற்கான அர்ஜென்டினா நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுதிப்பாட்டை மூத்த அமைச்சர் லீ வரவேற்றார்.

