மூத்த அமைச்சர் லீ சியன் லூங், ஆகஸ்ட் 24 முதல் 31ஆம் தேதி வரை கசக்ஸ்தானுக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் அதிகாரபூர்வப் பயணம் மேற்கொள்கிறார்.
மத்திய ஆசிய நாடுகளுக்கு மூத்த அமைச்சர் லீ மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவெனப் பிரதமர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமையன்று (ஆகஸ்ட் 23) அறிக்கை வெளியிட்டது.
தமது பயணத்தின் முதல் கட்டமாக ஆகஸ்ட் 24 முதல் 27ஆம் தேதி வரை கசக்ஸ்தானில் உள்ள அஸ்தானா, அல்மாட்டி ஆகிய நகரங்களுக்குத் திரு லீ செல்கிறார்.
அஸ்தானாவில் அவர் அந்நாட்டு அதிபர் காசிம்-ஜோமார்ட் தோக்காயேவ், பிரதமர் ஓல்ஜாஸ் பெக்தேனவ், துணைப் பிரதமரும் மின்னலக்க மேம்பாட்டு அமைச்சருமான ஜாஸ்லான் மாதியாவ் மற்றும் துணைப் பிரதமர் கனாத் போசும்பாயேவ் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார்.
இந்தப் பயணத்தின்போது, அதிபர் தோக்காயேவ் மூத்த அமைச்சர் லீக்கு கசக்ஸ்தானின் உயரிய விருதான ‘ஃபர்ஸ்ட் கிளாஸ் ஆர்டர் ஆஃப் தோஸ்திக்’ (நட்புறவு) விருதை வழங்கி கௌரவிக்கவுள்ளார்.
முன்னதாக சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ 2012ஆம் ஆண்டிலும், அப்போதைய அதிபர் ஹலிமா யாக்கோப் 2023ஆம் ஆண்டிலும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
மேலும், நசர்பாயேவ் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றும் திரு லீக்கு, அங்கு கௌரவப் பேராசிரியர் பட்டமும் வழங்கப்படவுள்ளது.
கசக்ஸ்தான் தமது உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையை மேம்படுத்தும் முயற்சியின் பகுதியாக அஸ்தானாவில் தன்னாட்சி பெற்ற ஆராய்ச்சிப் பல்கலைக்கழகமாக நசர்பாயேவ் பல்கலைக்கழகத்தை 2010ஆம் ஆண்டில் நிறுவியது.
அல்மாட்டி நகரில், அல்மாட்டி மேயர் தர்கான் சத்யபால்டி அளிக்கும் மதிய விருந்தில் கலந்துகொள்ளும் திரு லீ, சிங்கப்பூர் மற்றும் கசக்ஸ்தான் தொழில் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.
சிங்கப்பூரும் கசக்ஸ்தானும் 1993ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தூதரக உறவைத் தொடங்கின. மே 2023ல் அதிபர் ஹலிமாவும் மே 2024ல் அதிபர் தோக்காயேவும் மேற்கொண்ட அதிகாரபூர்வ அரசுமுறைப் பயணங்கள் மூலம் இருதரப்பு உறவுகள் அண்மைக்காலமாக வலுவடைந்துள்ளன.
பயணத்தின் இரண்டாம் கட்டமாக ஆகஸ்ட் 27 முதல் 31ஆம் தேதி வரை உஸ்பெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட், சமர்கண்ட் ஆகிய நகரங்களுக்கு மூத்த அமைச்சர் லீ செல்கிறார்.
தாஷ்கண்ட்டில் அதிபர் ஷவ்காத் மிர்சியோயேவ், பிரதமர் அப்துல்லா அரிப்போவ் ஆகியோரைச் சந்திக்கும் அவர், உஸ்பெக் நாடாளுமன்ற மேலவையான ‘ஒலி மஜ்லிஸ்’ செனட் சபையில் உரையாற்றவுள்ளார். தொடர்ந்து சமர்கண்ட் செல்லும் அவரை, சமர்கண்ட் வட்டார ஆளுநர் அதிஸ் போபோயேவ் மதிய விருந்தளித்து உபசரிக்கவுள்ளார்.
சிங்கப்பூருக்கும் உஸ்பெகிஸ்தானுக்கும் இடையே 1997 ஏப்ரலில் தூதரக உறவு நிறுவப்பட்டது.
மூத்த அமைச்சர் லீயின் இந்தப் பயணத்தில் வெளியுறவு, உள்துறை அமைச்சுகளின் துணையமைச்சர் சுல்கர்னைன் அப்துல் ரஹீம், நாடாளுமன்ற உறுப்பினர் ஃபூ செ சியாங் மற்றும் வெளியுறவு அமைச்சு, வர்த்தக, தொழில் அமைச்சு, பிரதமர் அலுவலகம் ஆகியவற்றின் மூத்த அதிகாரிகளும் உடன் செல்கின்றனர்.


