தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மூத்த அமைச்சர் லீ: இனத்தையும் சமயத்தையும் அரசியலுடன் கலப்பது ஆபத்தான போக்கு

2 mins read
e5115b2c-59d3-4451-bff6-118087274fc7
அனைவரும் இன, மொழி, சமயத்திற்கு அப்பாற்பட்ட, ஒரே மக்கள் என்பதை உறுதிப்படுத்தவேண்டும் என்று மூத்த அமைச்சர் லீ , மக்கள் செயல் கட்சியின் பிரசார மேடையில் கூறினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

தேர்தல் நடைபெறும் நேரத்தில் இனத்தையும் சமயத்தையும் அரசியலுடன் கலப்பதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து அரசாங்கம் வலுவாகக் குரல்கொடுக்க வேண்டியிருப்பதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், இது சிங்கப்பூரின் கொள்கைகளின் அடிநாதத்திற்குச் செல்லக்கூடிய மிக அடிப்படையான விவகாரம் என்று திரு லீ குறிப்பிட்டார்.

ஃபெர்ன் கிரீன் தொடக்கப் பள்ளியில் மக்கள் செயல் கட்சி ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) நடத்திய பிரசாரக் கூட்டத்தின் முத்தாய்ப்பாக உரையாற்றிய திரு லீ, மலாய், சீனம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பேசினார்

அவருடன் ஜாலான் காயு தனித்தொகுதி, கெபுன் பாரு தனித்தொகுதி, அங் மோ கியோ குழுத்தொகுதி ஆகியவற்றைச் சேர்ந்த மசெக வேட்பாளர்கள் மேடையை அலங்கரித்தனர்.

தத்தம் இன, சமயக் குழுக்களின் கோரிக்கைகளை ‘போதிய அளவுக்கு’ வலுவாக முன்வைக்கவில்லை என்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களும் வேட்பாளர்களும் சாடப்படுவதாக மூத்த அமைச்சர் லீ கூறினார்.

சமய ஈடுபாட்டின் அடிப்படையில் குறிப்பிட்ட சில மலாய் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கும்படி மக்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் என்றார் அவர். 

“இது நடைபெறுகிறது என்பதைச் சிங்கப்பூரர்கள் அறியவேண்டும். அதனால் விளையும் ஆபத்துகளை உணர்ந்து, உறுதியுடன் புறக்கணித்து, நாம் அனைவரும் இன, மொழி, சமயத்திற்கு அப்பாற்பட்ட ஒரே மக்கள் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்,” என்று திரு லீ கூறினார்.

சிங்கப்பூர் பிரதமராகத் தாம் பணியாற்றியபோது, மலாய் முஸ்லிம் சமூகத்தோடு அணுக்கமாக இணைந்து பணியாற்றிய பெரும்பேற்றுக்காக நன்றியுணர்வுடன் இருப்பதாக மலாய் மொழியில் உரையாற்றுகையில் திரு லீ குறிப்பிட்டார்.

“அது, பிரதமர் லாரன்ஸ் வோங்கின் தலைமைத்துவத்தின்கீழும் தொடர்வது குறித்து மகிழ்கிறேன்,” என்றார் அவர்.

மலாய் முஸ்லிம் சமூகம், உலக விவகாரங்களில் வெற்றியடைவதுடன் தங்கள் சமயத்தைப் பேணுவதற்கான இடத்தையும் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மசெக தனது பணியைச் செய்துவருவது பற்றி எதிர்க்கட்சிக்குத் தெரியும் என்றும் அவர் சொன்னார். 

தேர்தலுக்குப் பிறகு வலுவான மசெக அரசாங்கம் இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் உறுதியுடன் கூறுவது, மசெக தனது வேலையைச் செய்திருப்பதை அந்தக் கட்சிகள் அங்கீகரிப்பதைக் காட்டுவதாக மூத்த அமைச்சர் லீ குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரர்களின் கருத்துப்படி,  மசெக மோசமாகச் செயலாற்றியுள்ளது எனச் சொல்ல முடியாது என்று நான் நினைக்கிறேன்,” என்றார் அவர்.

இந்தத் தேர்தலில் மசெகவின் புதிய வேட்பாளர்கள் குறித்துப் பேசிய மூத்த அமைச்சர் லீ, இம்முறை சரியான பண்புகள் உள்ளவர்களைத் தாங்கள் கொண்டுவந்துள்ளதாகத் தெரிவித்தார்.

“அனுபவமும் துடிப்பும் மிக்க நல்லதொரு கலவையை அறிமுகம் செய்திருப்பதன்மூலம் சிங்கப்பூரை முன்னெடுத்துச் செல்லும் புதிய உறுதிமிக்க அணியைக் களமிறக்கியுள்ளோம்,” என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்