இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்த திட்டங்கள் குறித்து மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஒவ்வோர் ஆண்டும் வரவு செலவுத் திட்ட உரையில் பகிரப்படும் தகவல்கள், நாட்டிற்கான ஒரு தொலைநோக்குப் பார்வை, மக்களின் விருப்பங்கள், அரசாங்கம் எவ்வாறு இத்திட்டங்களை அடுத்த ஓர் ஆண்டுக்குக் கொண்டு செல்லவுள்ளது என்பனவற்றை அமைக்கும் ஒரு தளமாக உள்ளது.
இன்று தேவைப்படும் வளங்களையும் வருங்கால தலைமுறையினரை வழிநடத்துவதற்கான வளங்களையும் சமநிலைப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டித்தன்மைமிக்க சூழலுக்கும், சவால்களுக்கும் இடையிலும் எஸ்ஜி60 வரவு செலவுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வெளியிட நிச்சயமற்ற சூழல்களால் சிங்கப்பூர் பாதிக்கப்படும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
ஒன்றுபட்ட மக்களாக நம்மை வலுப்படுத்துவது இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டம். நமது எதிர்காலம், சிங்கப்பூரர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்புகள், இளம் வயதினருக்கும், மூத்தோருக்கும் நல்ல வாய்ப்புகள் வழங்குவதில் முதலீடு செய்யப்படுகிறது.
ஒருவர் எந்த வயதில் இருந்தாலும் எவ்வளவு அனுபவங்களைப் பெற்றிருந்தாலும் எவ்வளவு திறன்கள் கொண்டிருந்தாலும் விருப்பத்திற்கேற்ப வாழும் ஒரு நாடாகவும் கனவை நனவாக்கும் ஒரு நாடாகவும் சிங்கப்பூர் திகழலாம்.
எத்தனை சவால்கள் எழுந்தாலும் அவற்றை நன்கு கையாளும் சூழலில் நாம் உள்ளோம் என்று தாம் நம்புவதாக மூத்த அமைச்சர் லீ பதிவிட்டிருந்தார்.

