மூத்த அமைச்சர் லீ சியன் லூங், சனிக்கிழமை (ஏப்ரல் 5) காலை, டெக் கீ கோர்ட் சந்தை, உணவங்காடி நிலையத்தில் கடைக்காரர்களையும் குடியிருப்பாளர்களையும் சந்தித்ததாகத் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர்களில் சிலர் பல பத்தாண்டுகளாக இந்தப் பகுதியில் வசிப்பவர்கள் என்றும் மேலும் சிலர் அண்மையில் இடம்பெயர்ந்தவர்கள் என்றும் திரு லீ குறிப்பிட்டார்.
மற்ற வட்டாரங்களைச் சேர்ந்தோரும் அந்த உணவங்காடி நிலையத்தின் உணவை உட்கொள்ள அங்கு வருவதாக அவர் கூறினார்.
டெக் கீ வட்டாரத்திலிருக்கும் வசதிகளைக் குடியிருப்பாளர்களும் மற்றவர்களும் அனுபவித்து மகிழ்வது தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறிய மூத்த அமைச்சர், அங்குள்ள உள்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவது, குடியிருப்பாளர்களின் நிதி, சமூகத் தேவைகளுக்கான ஆதரவு ஆகியவை தொடர்பில் சிலர் தம்மிடம் கருத்துரைத்ததாகக் குறிப்பிட்டார்.
டெக் கீயில் உள்ள தமது குழுவினர் இத்தகைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண, தொடர்ந்து கடினமாக உழைப்பர் என்றார் அவர்.
இன்று சந்தித்த பலரும் தாம் உடல்நலத்துடன் வாழ வாழ்த்து கூறியதைக் குறிப்பிட்ட திரு லீ, அவர்களின் மனமார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி கூறியதுடன் தாமும் அவர்கள் அனைவரின் உடல்நலம் சிறக்க வாழ்த்துவதாகக் குறிப்பிட்டார்.

