வல்லரசுப் போட்டிக்கு இடையே சிறிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட மூத்த அமைச்சர் லீ வலியுறுத்து

வல்லரசுப் போட்டிக்கு இடையே சிறிய நாடுகள் ஒன்றிணைந்து செயல்பட மூத்த அமைச்சர் லீ வலியுறுத்து

2 mins read
64cd0359-c805-4696-9ed9-762ce25b9726
உஸ்பெகிஸ்தானின் சமர்கண்ட் நகரில் உள்ள சியோப் சந்தை வழியே சென்ற மூத்த அமைச்சர் லீ சியன் லூங், அங்கிருந்த உள்ளூர் வாடிக்கையாளர்களுடன் கலந்துரையாடினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

தாஷ்கண்ட்: வளர்ந்து வரும் முக்கிய வல்லரசுகளுக்கு இடையிலான போட்டி, வர்த்தகத்தை ஆயுதமாக்கும் போக்கு போன்றவை சிறிய நாடுகள் தங்களின் சொந்தப் பாதையை வகுப்பதற்கான வாய்ப்புகளைக் குறைத்து வருவதாக மூத்த அமைச்சர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், சிங்கப்பூர், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகள் தங்களை முடக்கிக்கொள்ளக் கூடாது எனத் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) உஸ்பெகிஸ்தான் நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோது அவர் வலியுறுத்தினார்.

அதற்கு மாறாக, நாடுகள் திறந்த மனப்பான்மையுடன் இயங்கவும் ஒத்த சிந்தனையுடைய பங்காளிகளுடன் உறவுகளை வலுப்படுத்ததவும் தேவையானவற்றை மேற்கொள்ளவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

“வர்த்தகம் ஆயுதமாக்கப்பட்டு வருகிறது. அதனை எதிர்கொள்ள, நாடுகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும் பொருளியல் நிலையையும் வளத்தையும் காட்டிலும் மீள்திறன், பாதுகாப்பு உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கின்றன,” எனத் தமது உரையில் அவர் குறிப்பிட்டார்.

அத்தகைய சூழலில், சிறிய, நடுத்தர நாடுகள் அதிக நிச்சயமற்ற தன்மையையும் குறைந்த வாய்ப்புகளையும் எதிர்கொள்கின்றன எனக் கூறிய திரு லீ, அது சிங்கப்பூருக்குக் கவலை அளிப்பதாகக் கூறினார்.

உஸ்பெகிஸ்தானும் அதைக் கவனத்தில்கொள்ள வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.

இரண்டாம் உலகப் போருக்கும் பனிப்போருக்கும் பிறகு நிலவிய விதிமுறைகளின் அடிப்படையிலான அனைத்துலக ஒழுங்குமுறை, சிறிய நாடுகளுக்குப் பாதுகாப்பையும் கணிக்கும் தன்மையையும் வழங்கியதாக மூத்த அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

உலக வர்த்தக நிறுவனம் மையமாகக் கொண்ட பலதரப்பு வர்த்தக அமைப்பால் இரு நாடுகளும் பெரும் பயனடைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், உலக வர்த்தக நிறுவனத்தில் இணைவதற்கான உஸ்பெகிஸ்தானின் நடவடிக்கையை வரவேற்றார்.

அதிபர் ஷவ்கத் மிர்சியோயேவின் தலைமையின்கீழ் 2026ஆம் ஆண்டில் உலக வர்த்தக நிறுவனத்தில் உறுப்பு நாடாக உஸ்பெகிஸ்தான் இலக்கு கொண்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுகளைத் தொடங்குவதற்கு ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்மூலம் பொது நிர்வாகம், விமானப் போக்குவரத்து, நகர்ப்புற மேம்பாடு, நீர் மேலாண்மை, நிதித் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பங்காளித்துவத்தை மேலும் விரிவுபடுத்த முடியும் என்றார் திரு லீ.

ஆசியானின் நட்புறவு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில் இணைய உஸ்பெகிஸ்தான் திட்டமிட்டுள்ளதையும் அவர் வரவேற்றார். செப்டம்பர் 1ஆம் தேதி கொண்டாடப்படும் உஸ்பெகிஸ்தானின் 35வது சுதந்திர தினத்திற்கு அவர் வாழ்த்து தெரிவித்துக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
மூத்த அமைச்சர்லீ சியன் லூங்பயணம்